சீனாவும் ஜப்பானும் சிங்கப்பூரின் நண்பர்கள்: பிரதமர் வோங்

சீனாவும் ஜப்பானும் சிங்கப்பூரின் நண்பர்கள்: பிரதமர் வோங்

2 mins read
ஒரு நாட்டின் நட்புக்காக மற்றொரு நாட்டை நிராகரிக்கக்கூடாது
243c1226-db3a-42a7-9d76-96678f06c25d
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனாவுடனும் ஜப்பானுடனும் சிங்கப்பூர் நல்ல நண்பராக இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மார்ச் 18) தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நட்புக்காக மற்றொரு நாட்டை நிராகரிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் வோங் ஜப்பானுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின்போது உள்ளூர் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர்.

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் சில விரிசல்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய செய்தியாளர், திரு வோங்கின் ஜப்பானியப் பயணத்தைச் சீனா எப்படி எடுத்துக்கொள்ளும் என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு வோங், “அரசதந்திர உறவில் சிங்கப்பூர் வேறுபாடு காட்டாது. முடிந்தவரை பலமான, நம்பகமான நண்பர்களை அதிகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சிங்கப்பூரின் கொள்கை,” என்றார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ, 2009ஆம் ஆண்டு வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசியதைத் திரு வோங் நினைவு கூர்ந்தார். “சிறிய நாடுகள் அதிகமான நண்பர்களை வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரம் அதன் இறையாண்மையும் சுதந்திரமும் முக்கியமானது,” என்று முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வலியுறுத்தினார்.

“அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் நல்ல நட்பைக் கொண்டுள்ளது. அதேபோல் மற்ற பல நாடுகளுடனும் சிங்கப்பூரின் நல்லுறவு தொடரும்,” என்றார் பிரதமர் வோங்.

உலகின் தற்போதைய சூழலில் அதிக நட்புக்கொள்வது சற்று சவாலான ஒன்றாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“நான் ஒரு நாட்டுக்குச் செல்லும் போது மற்ற நாடுகள் அதைக் கவனிக்கலாம். இப்போது ஜப்பானில் இருப்பதைச் சில நாடுகள் கவனிக்கக்கூடும். அடுத்து சீனாவுக்குச் செல்வேன், ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்குச் செல்வேன் அப்போதும் மற்ற நாடுகள் கவனிக்கும். தற்போதைய உலக புவிசார் அரசியல் சூழலில் இது தவிர்க்கமுடியாது ஒன்று,” என்றார் பிரதமர் வோங்.

ஜப்பானுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு வோங்கின் பயணம் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் இன்னும் சில நாள்களில் சீனாவில் நடக்கும் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்