அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி பேச்சுவாரத்தை தொடர வேண்டும். அது இருதரப்புக்கும் இடையிலான வேற்றுமைகளைத் தாண்டி ஒன்று மற்றதன் கண்ணோட்டத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி ஷங்ரிலா மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சான், தனிப்பட்ட முறையில் இருநாட்டுப் பேராளர்களிடமும் பேசியதில் வல்லரசுகள் ஒன்று மற்றதை இன்னும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள விரும்புவதைக் குறிப்பிடுவதாகச் சொன்னார். அதற்கு வெளிப்படையான கலந்துரையாடல் தேவை என்றார் அவர்.
“ஒரு தரப்பு மற்ற தரப்பு சொல்வதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அந்தத் தரப்பு என்ன சொல்கிறது என்பதைக் கேட்பது அவசியம். முக்கியமாக அத்தரப்பு முன்வைக்கும் கருத்துக்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் திரு சான்.
சிங்கப்பூரின் ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இரண்டு நாள் வருடாந்தர பாதுகாப்பு மாநாட்டில் வட்டார, அனைத்துலகத் தற்காப்புத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தின் உரை பற்றியும் மாநாட்டுக்கு சீனா உயர்மட்ட அதிகாரிகளை அனுப்பாதது பற்றியும் கேட்கப்பட்டது.
மே 31ஆம் தேதி, இந்தோ - பசிபிக் வட்டாரத்திற்கு சீனா விடுக்கும் மிரட்டல் உண்மையானது என்றும் ஆசியான் நாடுகள் அவற்றின் தற்காப்புச் செலவினங்களை உயர்த்த வேண்டும் என்றும் திரு ஹெக்செத் கூறினார்.
திரு ஹெக்செத்தின் உரையை ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாக வாசித்ததாகச் சொன்ன திரு சான், ஒரு சில பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
சீனாவின் நடத்தையை அந்த உரை மேற்கோள் காட்டினாலும் அமெரிக்காவின் நோக்கம் குறித்த முக்கியமான செய்தியும் அதில் இடம்பெற்றிருந்தது என்றார் திரு சான்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவையோ அமெரிக்காவையோ தனித்தனி சக்திகளாகப் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்திய திரு சான், இருதரப்பும் உள்நாட்டில், வெளிநாட்டிலிருந்தும் சவால்களை எதிர்கொள்கின்றன என்றார்.
எனவேதான், இரு வல்லரசுகளும் ஒன்றோடு ஒன்று நேரடியாகப் பேச வேண்டும் என்று திரு சான் குறிப்பிட்டார்.
பெரிய அளவிலான கலந்துரையாடல்களைத் தாண்டி உலக நாடுகளின் அமைச்சர்கள் சிறிய குழுக்களிலும் சந்தித்து பேசுவதற்கு ஷங்ரிலா மாநாடு வழியமைக்கிறது.
“ஓர் அறைக்குச் சென்று ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுவது நன்மை பயக்கும். அதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூரால் செய்துகொடுக்க முடிந்தால் மகிழ்ச்சியாகச் செய்து தருவோம்,” என்று திரு சான் கூறினார்.
அமெரிக்க, சீனப் பேராளர்களைச் சந்தித்தாகக் கூறிய திரு சான், இரு தரப்பினருக்கும் தாம் கூறுவது என்னவென்றால், ராணுவம், பொருளியல் இரண்டும் பாதுகாப்பான முறையில் ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.