நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகளை உற்று கவனிக்கிறது சீனா

நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகளை உற்று கவனிக்கிறது சீனா

2 mins read
d7e9df82-769a-4656-87f8-795b4a7da2cc
சீனர்களால் தொடங்கப்பட்டு, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மேனஸ் நிறுவனம், அமெரிக்கத் தொழில்நுட்பப் பெருநிறுவனமான மெட்டாவிற்கு விற்கப்படுவதைச் சீனா ஏப்ரல் மாதம் தடுத்தது. - படம்: ‌ஷின்மின்

வெளிநாட்டு முதலீடுகள் குறித்த சீனாவின் புதிய விதிமுறைகள், சிங்கப்பூரின் வர்த்தக நடவடிக்கைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

புதிய விதிமுறைகள் ஜூலை முதல்தேதி நடப்புக்கு வருகின்றன. உலகச் சந்தைகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் சீன நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கிறது.

அந்த விதிமுறைகளின் காரணமாகக் குறுகிய கால அடிப்படையில் சில வர்த்தக உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தச் சற்றுத் தாமதமாகலாம் என்று தொழில்முனைவர்கள், முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

சீன நிறுவனங்கள் சிங்கப்பூர் வழியாக வணிகத்தை விரிவுபடுத்துவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவை வெளிநாடுகளில் செயல்படும் முறையை அந்த விதிமுறைகள் மாற்றியமைக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிய விதிமுறைகள் பற்றி இம்மாதம் முதல்தேதி சீனா அறிவித்தது.

வெளிநாட்டு முதலீடுகள் செயல்படும் முறையை முழுமையாகக் கண்காணிக்க அந்த விதிமுறைகள் வழிவிடும். மேலும் அவை, முதன்முறையாக வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகளை நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் வெளிப்படையாக இணைக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பகுதிமின்கடத்திகள், மின்கலன்கள், மின்வாகனங்கள் போன்ற முக்கியத் துறைகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றோடு திறனாளர்களும் எவ்வாறு வெளிநாடுகளில் செயல்படுகின்றனர் என்பதைச் சீனா தெளிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவதையே புதிய விதிமுறைகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

புதிய விதிமுறைகள்பற்றிச் சீனாவைச் சேர்ந்த ‘ஏஐ’ நிறுவனங்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவர் எலென் செங்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அந்த விதிமுறைகள் ஓராண்டுக்கு முன்னர் வந்திருந்தாலும் அல்லது பின்னர் வந்தாலும் பெரிய அளவுக்கு மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்காது என்று திருவாட்டி செங் கூறினார். இன்றைய அரசியல் சூழலில் தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தொழில்முனைவர்கள் ஏற்கெனவே அதிக விழிப்புணர்வுடன் இருப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர். ‘த ஏஐ டூயட்’ எனும் சீன மொழி வலையொளியை அவர் நடத்துகிறார்.

“சீனத் தொழில்முனைவர்கள் பலர் இன்னும் உலகளாவிய சந்தைக்குள் நுழைய விரும்புகின்றனர். திறனாளர்கள், தரவு ஏற்றுமதி போன்ற அம்சங்களில் சீனாவின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள்,” என்று திருவாட்டி செங் குறிப்பிட்டார்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் ‘மேனஸ்’ விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு, தேசியப் பாதுகாப்பு அக்கறைகள், நடைமுறையில் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதைக் காட்டியது.

சீனர்களால் தொடங்கப்பட்டு, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மேனஸ் நிறுவனம், அமெரிக்கத் தொழில்நுட்பப் பெருநிறுவனமான மெட்டாவிற்கு விற்கப்படுவதைச் சீனா ஏப்ரல் மாதம் தடுத்தது.

இந்தச் சம்பவம் முதலீட்டுச் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், உத்தி ரீதியாக முக்கியமான ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை அதன் முதன்மை அரசியல் எதிரியான அமெரிக்காவிடம் ஒப்படைக்கச் சீனா தயாராக இல்லை என்பதையும் இது உணர்த்தியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சீனாவர்த்தகம்ஏஐமெட்டா