சாங்கி விமான நிலையத்தின் ஓடுபாதையொன்றில் சென்ற ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சின் இரண்டு விமானங்கள் ஒருசில மணித்துளிகள் இடைவெளியில் தரையிறங்கின.
முதல் விமானம் தரையிறங்கி ஓடுபாதைக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்தபோதே இன்னொரு விமானமும் தரையிறங்கியதால் அசம்பாவிதம் நேரவிருந்தது. இருந்தாலும் அது தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
விமானம் தரையிறங்குவதற்கும் புறப்பட்டுச் செல்வதற்கும் பயன்படும் ஓடுபாதையின் இரு முனைகளிலும் ஒரு சிறு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, புறப்படுவதைக் கைவிடும் சூழலில் ஓடுபாதையைத் தாண்டி விமானம் செல்லும்போது அதற்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்கு அந்தச் சிறுபகுதி உதவியாக இருக்கும்.
ஓடுபாதையின் நடுவிலிருந்து சுமார் 140 மீட்டர் தொலைவு வரை அந்தப் பகுதி அமைந்திருக்கும். ஓடுபாதையின் இரு புறமும் உள்ள துணைப்பாதைகள் விமான நிலையக் கட்டடங்களையும் மற்ற வசதிகள் இருக்கும் இடங்களையும் ஓடுபாதையுடன் இணைக்கும்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு (TSIB), இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் தேதி அறிக்கையொன்றை வெளியிட்டது.
இரண்டாவது விமானம் வானில் வட்டமிடும்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையைப் பின்பற்றத் தவறியதாலும் முதல் விமானம் எதிர்பார்த்ததைவிட மெதுவாக ஓடுபாதையைவிட்டு வெளியேறியதாலும் நெருக்கடி நிலை ஏற்பட்டதாக அறிக்கை சொன்னது.
சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சின் இரண்டு விமானங்களும் சீனாவின் ஷாங்காய் புடோங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தன.
முதல் விமானமான ஏ320-200 நியோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு மணி 8:12:04க்கு 20ஆர் ஓடுபாதையில் தரையிறங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இரு விமானங்களும் அருகில் வரக்கூடும் என்பதை உணர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி, முதல் விமானத்தை ஓடுபாதையிலிருந்து விரைவாக வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஓடுபாதையின் நீளம் 4 கிலோமீட்டர்.
முதல் விமானத்தின் விமானிகள் அருகிலிருந்த விரைவு வெளிவழித் துணைப்பாதை டபிள்யூ7ஐ நோக்கி விமானத்தை இடப்புறமாகத் திருப்பினர். இது நடந்தபோது நேரம் 8:12:47.
இரவு 8:12:54க்கு ஓடுபாதையில் நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரண்டாவது விமானம் தரையிறங்குவதற்குள் முதல் விமானத்தால் ஓடுபாதையைவிட்டு வெளியேற முடியாமல் போகக்கூடும் என்று அது குறிப்பிட்டது.
முதல் விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையைவிட்டு ஏற்கெனவே சென்றுவிட்டது என்று கணித்ததால் இரவு 8:12:55க்கு இரண்டாவது விமானமான போயிங் 777-300இஆர் தரையிறங்குவதற்கு அவர் அனுமதி தந்தார்.
சில வினாடிகளுக்குப் பிறகு, 8:13:25க்கு, முதல் விமானத்தால் உரிய நேரத்திற்குள் வெளியேற முடியாது என்று அதிகாரி கருதியதால் இரண்டாவது விமானத்தை வானில் வட்டமிடுமாறு உத்தரவிட்டார்.
இரண்டாவது விமானத்தின் விமானிகள் அவரின் உத்தரவை அங்கீகரிக்காமல் தொடர்ந்து விமானத்தைத் தரையிறக்கினர். விமானம் இரவு 8:13:38க்குத் தரையிறங்கியது.
கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவு தங்களுக்குக் கேட்கவில்லை என்று அவர்கள் பின்னர் கூறினர்.
அதன் பிறகு இரண்டு விமானங்களும் தத்தம் நிறுத்தும் இடங்களுக்குச் சென்றன.
இரண்டாவது விமானத்தின் விமானிகள் கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவைக் கேட்கத் தவறியிருக்கக்கூடும் என்று புலனாய்வுக் குழு நம்புகிறது.
சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானப் பயணத்தின் அனைத்துக் கட்டங்களிலும் விழிப்புடன் இருக்குமாறு அதன் விமானிகளுக்கு நினைவூட்டியிருப்பதாக டிஎஸ்ஐபியின் அறிக்கை குறிப்பிட்டது.