பெய்ஜிங்: தைவானையும் ஜப்பானையும் கடந்து பயணித்த இரு ரஷ்யப் போர்க்கப்பல்கள் சீனாவுக்கு வருகையளித்துள்ளன.
ஏழு நாள் வருகை மேற்கொண்டுள்ள இந்தப் போர்க்கப்பல்கள், சீனக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நீடிக்கும் ராணுவ ஒத்துழைப்பைப் போர்க்கப்பல்களின் வருகை எடுத்துக்காட்டுவதாக சீன அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
குரோம்கி, சொவர்ஷென்னி எனப் பெயரிடப்பட்ட இரு ரஷ்யப் போர்க்கப்பல்களும் புதன்கிழமை ஷங்காய் நகர நிதி மையத்தைச் சென்றடைந்தன.
ரஷ்யாவின் பசிபிப் படைக்குச் சொந்தமான இந்தக் கப்பல்கள், ஜூன் மாதக் கடைசியில் தைவானுக்கு அருகிலிருந்த கடற்பகுதியில் பயணித்தன. பின்னர், ஜூலை மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள ஜப்பானின் ஒகினாவா தீவைக் கடந்து சென்றன.
போர்க்கப்பல்களைக் கண்காணிக்க ஜப்பான் கப்பல்களை அனுப்பியது. தைவானும் கப்பல்களையும் ஒரு விமானத்தையும் அனுப்பியது.
சீனாவும் ரஷ்யாவும் வலுவான ராணுவ உறவை நிலைநாட்டப் போவதாக உறுதி எடுத்துள்ளன. திங்கட்கிழமை சீனத் தற்காப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ ரஷ்யக் கடற்படைத் தலைவர் அட்மிரல் நிக்கோலாய் யெவ்மெனோவை பெய்ஜிங்கில் சந்தித்தார்.
அதற்கு முன்னதாக, இருநாட்டு வெளியுறவு அமைச்சுகளும் ஜூன் மாதக் கடைசியில் ஏவுகணை தற்காப்பு குறித்து ஆலோசனைகள் நடத்தின.
இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தப் போவதாக ரஷ்யாவின் தலைமைத் தளபதி வேலரி ஜெரசிமோவ் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.