பெய்ஜிங்: சீனாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது.
பதுங்கித் தாக்கும் மிரட்டலான போர் விமானங்கள், தாக்குதல் வானூர்திகள் உள்ளிட்டவை தொடக்க நாளின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
தனது ராணுவ, ஆயுத பலத்தைப் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சிக்குச் சீனா ஏற்பாடு செய்துள்ளது. 15ஆவது முறையாக சீனாவின் விமானக் கண்காட்சி நடைபெறுகிறது.
சீனா அண்மைக்காலமாக தனது விமானப்படையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தவும் படையை விரிவாக்கம் செய்யவும் பல பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது.
அமெரிக்கா, தைவானுக்கு நல்ல ராணுவ ஒத்துழைப்பு தருவதால் தனது பலம் ஆசிய வட்டாரத்தில் குறைந்துவிடக்கூடாது என்பதில் சீனா கவனமாக உள்ளது.
சீனாவின் சூஹாய் நகரில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை விமானக் கண்காட்சி நடக்கும். அதில் பயணிகள் மற்றும் ராணுவம் பயன்படுத்தும் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
கண்காட்சியில் பதுங்கித் தாக்கவல்ல (stealth) போர் விமானங்களை சீனா காட்சிப்படுத்தியுள்ளது பேசுபொருளாகி இருக்கிறது.
இதுவரை அமெரிக்காவிடம் மட்டுந்தான் பதுங்கித் தாக்கவல்ல இருவகை போர் விமானங்கள் இருந்து வந்தன. தற்போது சீனாவிடமும் அத்தகைய இருவகை போர் விமானங்கள் உள்ளன.