தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வலுக்கிறது வர்த்தகப் போர்: அமெரிக்கப் பொருள்களுக்குச் சீனா 125% வரி விதிப்பு

2 mins read
3ae4ca71-dee6-4a70-9687-9d9170068d18
பெய்ஜிங் வந்துள்ள ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸுடன் சீன அதிபர் ஸி ஜின்பிங் பேச்சு நடத்தினார். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு 125 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகவும் அது உடனடியாக சனிக்கிழமையே (ஏப்ரல் 12) நடப்புக்கு வருவதாகவும் சீனா அறிவித்து உள்ளது.

அமெரிக்கப் பொருள்களுக்கு இதற்கு முன்னர் தான் அறிவித்து இருந்த 84 விழுக்காட்டு வரியை 125 விழுக்காட்டுக்கு உயர்த்தி இருப்பதாக சீன நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) தெரிவித்தது.

“அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடருமானால் அதனை சீனா புறக்கணிக்கும். காரணம், அமெரிக்கப் பொருள்கள் சீனாவில் உள்ள இறக்குமதியாளர்களுக்கு இனிமேல் பொருளியல் ரீதியாக பயன்படாது,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

வெள்ளை மாளிகை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதைத் தொடர்ந்து, சீனா பதிலடி நடவடிக்கையாக புதிய வரி உயர்வை அறிவித்து உள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான சீனா, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாகும்.

பெரும்பாலான நாடுகளுக்கான வரிவிதிப்பை 90 நாள்களுக்குத் தள்ளி வைத்த அமெரிக்கா, சீனாவுக்கு மட்டும் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.

அதற்குப் பதிலடி தரும் வகையில் அறிக்கை வெளியிட்டு உள்ள சீன நிதி அமைச்சு, “சீனா மீது அமெரிக்கா அளவுக்கு அதிகமாக வரி விதித்து இருப்பது அனைத்துலக மற்றும் பொருளியல் வர்த்தக விதிகளையும் அடிப்படைப் பொருளியல் சட்டங்களையும் மீறும் செயல்,” என்று குறிப்பிட்டு உள்ளது.

மேலும், “பொது அறிவுக்கு எட்டாத இந்தச் செயல் முழுக்க முழுக்க ஒருதலைபட்ச அச்சுறுத்தல் மற்றும் கட்டாயப்படுத்துதல் ஆகும்,” என்றும் அது தெரிவித்து உள்ளது.

அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “சீனப் பொருள்களுக்கான வாஷிங்டனின் வரிவிதிப்பு என்பது எண்களால் நடத்தப்படும் வெறும் விளையாட்டே தவிர, பொருளியலில் எந்த ஒரு நடைமுறைத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, தன்னுடைய அச்சுறுத்தலை தானே அம்பலப்படுத்தக்கூடிய வேடிக்கையான செயல் அது,” என்றார்.

ஓரணியில் திரள ஐரோப்பாவுக்கு சீனா அழைப்பு

இந்நிலையில், அமெரிக்காவின் ஒருதலைபட்ச அச்சுறுத்தலைத் தடுத்த நிறுத்த சீனாவோடு கைகோக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பெய்ஜிங் வந்துள்ள ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) சந்தித்துப் பேசிய அவர், வரி விதிப்பு விவகாரத்தில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல்வேறு பதிலடி நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சினமூட்டும் வகையில் பதில் அளித்திருந்தார்.

பதிலுக்குப் பதில் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றிய) வரி விதித்தால் சீனாவுக்கு நேர்ந்ததுதான் அவர்களுக்கும் நிகழும் என்று மறைமுகமாக திரு டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், பதில் வரி விதிக்கத் தயாராகுமாறு ஒன்றியத்தை பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் வலியுறுத்தி உள்ளார். தேவையான எல்லா பதிலடி நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டும் என அவர் தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்