சீனா அதன் பொருளியலை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாரம் சில திட்டங்களை அறிவித்தது. சீனாவில் வர்த்தகம் செய்ய நினைக்கும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இது பெரும் பயனாக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
சீனாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள திரு டெஸ்மண்ட் லீ தமது பயணத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இக்கருத்தை தெரிவித்தார்.
சீனா அதன் பொருளியல் வளர்ச்சியைப் புதுப்பிப்பதில் உறுதியாகவுள்ளதை சிங்கப்பூர் நிறுவனங்கள் தற்போது தெளிவாக அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரைச் சேர்ந்த பல சிறு, நடுத்தர நிறுவனங்கள் சீனாவில் உள்ளன, சில நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து வேலை செய்கின்றன, சில நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன, தற்போது சீனப் பொருளியல் கொள்கைகள் அனைவருக்கும் உதவும்,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
சிங்கப்பூர் வெளிப்படையான பொருளியல் கொள்கையைப் பின்பற்றுவதாகவும் அது சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா என அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் பொருளியல் நெருக்கடி எழுந்துள்ளது. அதை சீர்செய்யும் விதமாக அந்நாட்டு நிதி அமைப்பு சில உதவித் திட்டங்களை செப்டம்பர் 24ஆம் தேதி அறிவித்தது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக சீனாவின் தலைவர்களும் பொருளியல் வளர்ச்சிக்காக மேலும் சில உதவித் திட்டங்களையும் அறிவித்தனர்.