சீனா, ஆகப்பெரிய ஆளில்லாச் சரக்கு விமானத்தை வடிவமைத்து பரிசோதித்துள்ளது.
இது வெற்றியடைந்தால் பொதுமக்களிடமிருந்து எந்தவொரு பொருளையும் பெற்று மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
உலகிலேயே வானூர்திகளைத் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் சீனா, அடுத்த கட்டமாக ஆளில்லாச் சரக்கு விமானங்களை உருவாக்கி வருகிறது.
தென்மேற்கு சிச்சுவான் மாநிலத்தில் 2,000 கிலோ எடையைத் தூக்கிச் செல்லக்கூடிய இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட விமானம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெள்ளோட்டம் கண்டது. சோதனை முறையில் சுமார் இருபது நிமிடங்கள் அது பறந்து சென்றது.
புதிய சரக்கு விமானத்தை உருவாக்கிய சிச்சுவானின் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனமான டெங்டென்னைச் சுட்டிக்காட்டி, அதிகாரபூர்வ ஊடகம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
விமானத்தின் உயரம் 4.6 மீட்டர், இறக்கையின் அகலம் 16.1 மீட்டர் ஆகும்.
முழுவதும் அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. உலகின் பிரபலமான இலகுரக நான்கு இருக்கை ‘செஸ்னா172’ விமானத்தைவிட இது சற்றுப் பெரியது.
குறைவான உயரத்தில் பறக்கும் விமானங்களின் பொருளியலில் சீன அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதால் சீன சிவில் வானூர்தி தயாரிப்பாளர்கள் ஆகப்பெரிய ஆளில்லாச் சரக்கு வானூர்திகளை உருவாக்கி, பரிசோதித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தொழில்துறையின் மதிப்பு 2023ஆம் ஆண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து 2030ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு டிரில்லியன் யூவானை (S$369 பில்லியன் ) எட்டும் என்பது சிவில் வானூர்தி தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த ஜூன் மாதம் ஏவிஐசி எனப்படும் சீன விமானத் தொழில் நிறுவனம் தயாரித்த சரக்கு வானூர்தியான எச்எச்-100, முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது.
இதையடுத்து டெங்டென்னின் சரக்கு விமானம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025ஆம் ஆண்டில் ஏவிஐசி, ‘டிபி2000’ என்ற ஆகப்பெரிய சரக்கு வானூர்தியைப் பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வானூர்தி, 2,000 கிலோ சரக்கை 2,000 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சுமந்து செல்லும் ஆற்றல் படைத்தது.

