அதிபர் ஸி வருகை: வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க தென்கிழக்காசிய நாடுகளை அரவணைக்கும் சீனா

2 mins read
319bdce1-758a-4814-8310-dcb9142c1d92
சீன அதிபர் ஸி ஜின்பிங். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் அடுத்த வாரம் மூன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வருகையளிக்கவுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதிகரித்து வரும் நிலையில், சீனா தனது பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிய வர்த்தகப் பங்காளிகளை நாடி அரவணைத்து வருகிறது.

அதற்கான முயற்சிகளில் ஒன்றாக திரு ஸியின் வருகை அமையவுள்ளது.

வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) வியட்னாம் செல்லும் அவர், செவ்வாய்க்கிழமை வரை அங்கு இருப்பார். பின்னர் அன்றைய தினம் மலேசியா மற்றும் கம்போடியாவுக்கான பயணத்தை அவர் தொடங்குவார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) வரை அந்தப் பயணம் நீடிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கான வரியை தொடர்ந்து உயர்த்தி வரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிற நாடுகளுக்கான வரி உயர்வை 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாகக் கூறினார்.

அந்த நாடுகளில் மேற்சொன்ன வியட்னாம், மலேசியா மற்றும் கம்போடியாவும் அடங்கும்.

பதிலடி வரியாக கம்போடியாவுக்கு 49 விழுக்காடு, வியட்னாமுக்கு 46 விழுக்காடு, மலேசியாவுக்கு 24 விழுக்காடு வரியை திரு டிரம்ப் அறிவித்திருந்தார்.

அதனைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவை அந்த நாடுகள் அணுகி வருகின்றன.

வரி உயர்வு விவகாரத்தில் சீனாவைத் தனிமைப்படுத்த வாஷிங்டன் முயன்றுவருகிறது.

திரு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் சீனாவுக்கு அமெரிக்கா 145 விழுக்காடு வரியை விதித்துள்ளது.

அந்த நிலையைச் சமாளிக்க, வரி விதிப்பால் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பிற நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பெய்ஜிங் கவனம் செலுத்திவருகிறது.

திரு ஸி, இவ்வாண்டு தாம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணத்தில் தென்கிழக்காசியாவுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்