சைனாடவுனில் ஆறு வயதுச் சிறுமியைப் பலிவாங்கிய விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்மீது புதன்கிழமை (ஏப்ரல் 8) குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
அவ்விபத்தில் மாண்ட சிறுமியின் தாய் காயமடைந்தார். அந்த 38 வயது பெண் ஓட்டுநர்மீது, கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று காவல்துறை, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதோடு, சிறுமியின் 31 வயது தாய்க்கு மோசமான காயம் விளைவிக்கும் வகையில் கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியது தொடர்பான குற்றச்சாட்டையும் ஓட்டுநர் எதிர்கொள்வார். விபத்தில் சிக்கிய தாயும் மகளும் சிங்கப்பூரில் சுற்றுலா வந்த இந்தோனீசியர்கள்.
ஸ்பிரிங் ஸ்திரீட்டில் நேர்ந்த விபத்து குறித்து கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி காலை 11.50 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்தது. சம்பவம், ‘புத்தா டூத் ரெலிக்’ பெளத்த ஆலயத்துக்கு அருகே நிகழ்ந்தது. ஓட்டுநர் சம்பவ இடத்தில் கைதுசெய்யப்பட்டார்.
விபத்தில் சிக்கிய ஷேனா லஷிரா ஸ்மாராடியானி என்ற சிறுமி சுயநினைவில்லாத நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
பிப்ரவரி எட்டாம் தேதி காலை அவரின் உடல் இந்தோனீசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அன்றைய தினமே இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சிறுமியின் தாயான ரைஷா அனிந்திரா பஸ்காசிவி என்ற மாதும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.

