சைனாடவுன் வட்டாரத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் நடந்த தாக்குதல் தொடர்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21), மாது ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீன நாட்டவரான ஹி லொங்ஃபெங்கிற்கு வயது 36. அவர், மார்ச் 19ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் ‘பீப்பள்ஸ் பார்க்’ வளாகத்தின் தரைத்தளத்தில் ஒருவரை வெட்டுக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, சம்பவ நாளன்று இரவு 8.50 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
அங்கு சென்ற அதிகாரிகள், ஆடவர் மூவர் காயமடைந்திருந்ததைக் கண்டனர்.
அவர்களில் இருவருக்கு முறையே 30, 41 வயது என்றும் அவ்விருவரும் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மூன்றாமவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. 42 வயதாகும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட மறுத்துவிட்டார்.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஹி, மருத்துவச் சோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுத்துவைக்கப்பட வேண்டுமென மார்ச் 21ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
அவரது வழக்கு ஏப்ரல் 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
ஆயுதத்தால் பிறரைக் காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ பிரம்படியோ இம்மூன்றில் ஏதாவது இரண்டோ மூன்றுமோ விதிக்கப்படலாம்.
இருப்பினும் பெண்களுக்குப் பிரம்படியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.