சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சாதனை அளவில் சீன உணவகங்களும் உணவு பானக் கடைகளும் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொந்த நாட்டில் உள்ள குறைவான வாடிக்கையாளரின் தேவை, கடுமையான போட்டித்தன்மை ஆகியவற்றிலிருந்து தப்பித்து அனைத்துலக அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த அத்தகைய உணவகங்களும் உணவு பானக் கடைகளும் சிங்கப்பூரை ஒரு தளமாகப் பயன்படுத்துகின்றன.
லக்கின் கோஃபி, மிக்ஸு பபள் டீக் கடை ஆகியவை ஹாட்பாட் மாலா உணவகத்துடன் வெளிநாடுகளில் முத்திரை பதித்து வருகின்றன.
சீனாவில் வணிகத்தை நடத்துவது இப்போது சிரமமாக உள்ளது என்றும் பல வர்த்தகங்கள் வெளிநாடுகளில் கால் பதிக்கின்றன என்றும் உணவக நிறுவனர்கள் தெரிவித்தனர்.
சீன நிறுவனங்கள் பிற நாடுகளில் அவற்றின் வர்த்தகத்தைக் கொண்டுசெல்ல சிங்கப்பூர் நீண்டகாலமாகப் படிக்கல்லாக இருந்து வருகிறது.
சிங்கப்பூரில் ஆகஸ்ட் நிலவரப்படி கிட்டத்தட்ட 85 சீன உணவு பானக் கடைகளும் 405 கிளைகளும் செயல்படுகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட அது இரட்டிப்பு மடங்கு அதிகம். அப்போது 32 உணவு பானக் கடைகளும் அதன் 184 கிளைகளும் சிங்கப்பூரில் செயல்பட்டன.
சிங்கப்பூரில் கிடைக்கும் வாய்ப்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சீன நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.