குடியிருப்பு வட்டாரங்களில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் சிங்கே அணிவகுப்பு (சிங்கே@ஹார்ட்லேண்ட்ஸ்) இம்மாதம் 29ஆம் தேதி பொங்கோல் வட்டாரத்தில் நிறைவடையும்.
ஒரு மாதமாக நடைபெற்றுவரும் சிங்கே கொண்டாட்டங்கள் பொங்கோலில் நிறைவுபெறும். முன்னதாக இம்மாதம் 7லிருந்து 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஈஸ்ட் கோஸ்ட், ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக், செம்பவாங் ஆகிய வட்டாரங்களில் சிங்கே அணிவகுப்பு நடந்தது. அந்தந்த வட்டாரங்களின் சாலைகளில் மக்கள் திரண்டு அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.
இவ்வாண்டு சிங்கே அணிவகுப்பின் இறுதி நிகழ்வாக சிங்கே மிதவைகள், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) பொங்கோல் ஃபீல்ட் வாக் வீவக புளோக் 128Cக்கு அருகே இருக்கும் திடலை மாலை வந்தடையும். பல்லின சமூகப் படைப்புகள், வாணவேடிக்கை, வானூர்திக் காட்சிகள் போன்றவற்றை அப்பகுதி குடியிருப்பாளர்கள் கண்டுகளிக்கலாம்.
சிங்க நடனக் குழுக்கள், தாள வாத்தியக் கலைஞர்கள், கழைக் கூத்துக் நடைக் கலைஞர்கள் ஆகியோரும் படைப்புகளை வழங்குவர்.
ஞாயிற்றுக்கிழமை சிங்கே அணிவகுப்பு மாலை 7.10 மணிக்குத் தொடங்கும். டாமாய், சூ தெக், நார்த்ஷோர் போன்ற பகுதிகள் வழியாக அணிவகுப்பு செல்லும். அப்பகுதிகளில் மக்கள் கண்டுகளிப்பதற்காக ஊர்வலம் சற்று மெதுவாக நடைபெறும்.
அன்று இரவு 8.45 மணியளவில் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உள்ள பொலிவார்ட் பிளாசாவில் அணிவகுப்பு முடிவுறும். அங்கு அணிவகுப்பின் நிறைவைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமான விழாக் கொண்டாட்டம் நடைபெறும்.

