சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடங்குகிறது

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடங்குகிறது

1 mins read
3a228b1d-d7fe-4abb-bc02-6a9cdad0cf64
சொங் பாங் சிட்டி கட்டுமானத் தளத்தில் ஊழியரின் கையிலிருந்து உலோகக் கம்பி நழுவி வீவக புளோக்மீது விழுந்ததில் மேற்கூரை சேதமடைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான கட்டுமானப் பணி மீண்டும் செவ்வாய்க் கிழமையன்று (மே 26) தொடங்கியது.

உலோகக் கம்பி ஒன்று விழுந்து வீவக கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்ததால் அங்கு மூன்று வாரத்திற்கு மேலாக அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கட்டுமானத் தளத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயத்தில் ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 103 மேற்கூரையை சீர்செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணி ஜூன் 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்று சிங்கப்பூர் நில ஆணையம் திங்கட்கிழமை (மே 25) தெரிவித்தது.

மே 2ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இருந்தாலும் உடனடியாக அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டதாக அது கூறியது.

மே 4ஆம் தேதி கட்டட, கட்டுமான ஆணையம் அந்த வேலை நிறுத்த உத்தரவை பிறப்பித்தது. அது மட்டுமல்லாமல் சம்பவத்தை தகுதிவாய்ந்த நபர் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆணையம், சில சரி செய்ய வேண்டிய அம்சங்களை பரிந்துரைத்தது.

உலோகக் கம்பியை அகற்றிக் கொண்டிருந்தபோது ஊழியரின் கையிலிருந்து நழுவியது விசாரணையில் தெரிய வந்தததாக ஆணையம் கூறியது.

இதில், வீவக புளோக்கின் கூரை சேதமடைந்தது. ஆனால் கட்டடத்தின் அடிப்படைக் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என்று வல்லுநர்கள் உறுதி செகய்துள்ளனர். புளோக்கும் பொது தாழ்வாரங்களும் குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆணையம் தெரிவித்தது.

மே 2ஆம் தேதி உலோகக் கம்பி விழுந்ததால் ஈசூன் புளோக் ஒன்றின் மேற்கூரை சேதமடைந்தது.
மே 2ஆம் தேதி உலோகக் கம்பி விழுந்ததால் ஈசூன் புளோக் ஒன்றின் மேற்கூரை சேதமடைந்தது. - படம்: கா. சண்முகம்/ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்ஈசூன்வீவக