ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கடைத்தொகுதி ஒன்றின் மேல் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரம் சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது.
அந்தச் சம்பவம் பற்றி தனக்கு இரவு 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
தனது படையினர் விரைந்து சென்று 250 ஆர்ச்சர்ட் ரோடு முகவரியில் உள்ள ‘டிசைன் ஆர்ச்சர்ட்’ கடைத்தொகுதியின் உச்சியில் எரிந்த தீயை அணைத்ததாகவும் அது தெரிவித்தது.
அச்சம்பவம் தொடர்பில் எவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் அவசியம் ஏற்படவில்லை என்றது எஸ்சிடிஎஃப்.
தீயணைப்புப் படையினர் வருமுன்னரே ஒருவர் தீயை அணைக்க முயன்றதைக் கண்டதாக பஸ்கர் ஜோனதன் டான் என்னும் 48 வயது ஆடவர் தெரிவித்தார்.
“தீ மளமளவென்று பெரிதாக எரிந்ததால் தீயணைப்பில் ஈடுபட்டவர் பற்றி சிறிது கவலைப்பட்டேன். இருப்பினும், தீயணைப்புப் படையினர் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த 9.45 மணிக்குள் தீயை அணைத்துவிட்டனர்,” என்றார் அந்த ஆடவர்.
கடைத்தொகுதியின் உச்சியில் பெரும்புகையுடன் தீ விண்ணை நோக்கி எரிந்துகொண்டிருந்ததை அவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளி காட்டியது.
அச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்ச்சர்ட் ரோட்டில் இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நைட்ஸ்பிரிட்ஜ் கடைத்தொகுதிக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரம் ஒன்று மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.