துவாசில் உள்ள கல் டிரைவில் ஜூன் 10ஆம் தேதி, அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 7,500 பெட்டிகளிலிருந்த கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன.
$812,384 சுங்கத் தீர்வையும் பொருள், சேவை வரியும் செலுத்தப்படாததன் தொடர்பில் மலேசிய ஆடவர் மூவர் கைது செய்யப்பட்டதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) சிங்கப்பூர்ச் சுங்கத் துறை தெரிவித்தது.
அந்த ஆடவர்கள் முறையே 40, 30, 24 வயது நிரம்பியவர்கள் என்றும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்களுக்கிடையே அவர்கள் பழுப்பு நிறப் பெட்டிகளை மாற்றியதை சுங்கத் துறை அதிகாரிகள் கவனித்ததாகவும் கூறப்பட்டது.
7,400 பெட்டிகளிலிருந்த சிகரெட்டுகளை கனரக லாரி ஒன்றிலிருந்தும் அத்தகைய மேலும் 100 பெட்டிகளை மற்றொரு பல பயன்பாட்டு வாகனத்திலிருந்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கள்ள சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இரு வாகனங்களும் தனித்தனியே சிங்கப்பூருக்கு வந்ததாகத் தெரிகிறது.
30 வயது ஆடவர், காப்பிப் பொருள்களுக்கிடையே மறைக்கப்பட்ட சிகரெட் பெட்டிகளுடன் கனரக லாரியை ஓட்டியதாகவும் 24 வயது ஆடவர், அந்தப் பெட்டிகளை இரண்டாவது வாகனத்துக்கு மாற்ற உதவியதாகவும் 40 வயது ஆடவர் அவற்றைச் சிங்கப்பூரிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
சந்தேகப் பேர்வழிகள் மூவரும் அடையாளம் தெரியாத மலேசியரால் பணியமர்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சுங்கத் தீர்வை, பொருள், சேவை வரி ஆகியவற்றைச் செலுத்தத் தவறியது நிரூபிக்கப்பட்டால் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையைப்போல் 40 மடங்கு வரையிலான அபராதமோ ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

