உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அக்டோபர் 11ஆம் தேதி மலேசியப் பதிவு எண் கொண்ட சிறிய லாரி ஒன்றை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.
டயர்களை அதிகாரிகள் சிறப்புக் கருவிகள் மூலம் அறுத்துச் சோதனையிட்டபோது அதில் 1,380-க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதுகுறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 22) சமூக ஊடகங்களில் ஆணையம் வெளியிட்ட காணொளியில், ஒரு டயரின் பக்கவாட்டுப் பகுதியை அதிகாரிகள் அறுப்பதைக் காண முடிகிறது.
ஒரு பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட சிகரெட் பெட்டிகள் ஒரு டயர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும் பல கடத்தல் பொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வாகனத்தின் மற்ற டயர்களையும் கழற்றி அதிகாரிகள் முழுமையாக அறுத்துச் சோதனையிட்டனர்.
அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் ஒன்றரை மேசைகளை நிரப்பும் அளவுக்குக் குவிந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
