முன்னைய கேத்தே சினிபிளெக்சஸ் திரையரங்குகளை நடத்திவந்த ‘எம்எம்2 ஏஷியா’ நிறுவனம் 14 மில்லியன் டாலர் நிதி திரட்டும் முயற்சியில் தோல்வியடைந்தது.
பொழுதுபோக்கு நிறுவனமான ‘எம்எம்2’ ஏஷியா, அதன் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் கடன்களை அடைக்கத் தேவையான நிதியைப் பெற முயன்றது.
இந்நிலையில், $14 மில்லியன் நிதியைத் திரட்டத் தவறிவிட்டதாகவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் தோல்வியடைந்ததாகவும் அந்நிறுவனம் புதன்கிழமை (ஏப்ரல் 1) அறிவித்தது.
“ஒரு பங்குக்குக் குறைந்தபட்சம் 80 காசு வீதம் ஏறத்தாழ 1.9 பில்லியன் பங்குகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்த ஒதுக்கீட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது; முடிவுக்கு வந்துவிட்டது. இனி அது செல்லுபடியாகாது,” என்று ‘எம்எம்2 ஏஷியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவான மார்ச் 31க்குள் ஒப்பந்தத்தில் இடம்பெற்ற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் ‘எம்எம்2 ஏஷியா’ விளக்கியது.
மார்ச் 9 அன்று, அந்நிறுவனம் தனது மறுசீரமைப்பு மற்றும் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக, ‘ஹில்ட்ரிக்ஸ் ஆசியா குரோத் ஃபண்ட் விசிசி’ என்ற தனியார் பங்கு நிதியத்துடன் கூட்டு சேர்ந்து, உரிமைப் பங்குகள் வெளியீட்டுடன் தனி பங்கு ஒதுக்கீட்டுத் திட்டத்தை குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம், பணப்புழக்கத்தை மேம்படுத்துவதையும் அதன் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த ஒதுக்கீடு வெற்றி பெற்றிருந்தால், 1.9 பில்லியன் மதிப்பிலான பங்குகள், ‘எம்எம்2 ஏஷியா’வின் விரிவாக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 22.3 விழுக்காட்டை உடையதாக இருந்திருக்கும்.

