சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு

சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு

2 mins read
d8df4835-2cea-4b99-a731-105066d1b7ed
பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் (நடுவில்). - படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

விளையாட்டுகளில் ஈடுபடும் ஆர்வம் சிங்கப்பூரர்களுக்கிடையே அதிகம் விதைக்கப்பட வேண்டுமென்றும் விளையாட்டுகள் மூலம் அவர்களின் பல்லினக் கலாசார உணர்வை மேம்படுத்த முடியுமென்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சென்றாண்டு உலகமெங்கும் நடைபெற்ற சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 700க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி இஸ்தானா வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 29) மாலை இடம்பெற்றது.

அதில் தமது மனைவியுடன் கலந்துகொண்ட அதிபர், சிறப்புரையாற்றி விளையாட்டு வீரர்களைப் பாராட்டினார்.

“விளையாட்டு வீரர்களை உருவாக்க நம் நாட்டில் பல வளங்கள் உள்ளன. அரசாங்கம் விளையாட்டு வீரர்களுக்காக அதிக நிதியுதவி வழங்க, தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கும்.

“விளையாட்டு மீதான ஆர்வத்தை இளம் வயதிலேயே பிள்ளைகளின் மனங்களில் பயிரிட வேண்டும்.

“பள்ளிகளில் இடம்பெறும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

தேசிய ஹாக்கி குழுவைச் சேர்ந்த குகன் சந்திரன், 27, “எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இஸ்தானாவுக்கு முதல்முறையாக வந்துள்ளேன். சென்றாண்டு நானும் என் குழுவினரும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்றோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது,” என்றார்.

கடந்த ஐந்தாண்டுகளாக நீர்ப்பந்தாட்டம் விளையாடும் மௌனிஷா தேவி மணிவண்ணன், 24, தற்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயில்கிறார்.

இரண்டு முறை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது குழு.

“சென்றாண்டு சீனாவில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் குழு ஆசியாவிலேயே நான்காவது இடத்தைப் பிடித்தது.

“இரண்டு வாரங்களுக்கு முன்பு தோஹாவில் இடம்பெற்ற உலக வெற்றியாளர் போட்டிக்கு நாங்கள் தகுதி பெற்றுள்ளோம். இதற்குமுன் எங்கள் குழு கண்டிராத சாதனை இது,” என்று பெருமிதத்துடன் கூறினார் மௌனிஷா.

குறிப்புச் சொற்கள்