சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் வட்டப் பாதையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சேவைகளில் இடையூறு ஏற்பட்டிருக்கிறது.
புதன்கிழமையன்று (செப்டம்பர் 18) அப்பாதையில் பல ரயில்களில் சிறிது நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டதால் சேவைத் தாமதம் ஏற்பட்டது. அதனால் வட்டப் பாதையில் சுமார் 15 நிமிடங்களுக்கு ரயில் சேவைகள் இல்லாதிருந்தது.
கிம் சுவான் முனையத்தில் இருக்கும் மின்சார அறை ஒன்றில் தீ மூண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக வட்டப் பாதையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சம்பவ இடத்தில் இருந்த பொறியாளர்கள் தீயை அணைத்ததாகவும் எஸ்எம்ஆர்டி கூறியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு 8.10 மணிக்குள் பிரச்சினை சரிசெய்யப்பட்டதாகவும் சுமார் 8.15 மணிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியதாகவும் எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்றும் (செப்டம்பர் 17) வட்டப் பாதை ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது.

