தொலைபேசி நிறுவனமான சர்க்கில்ஸ்.லைஃப் (Circles.Life) தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் எம்1-சிம்பா (M1- Simba) இணைவது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
சர்க்கில்ஸ்.லைஃப் நிறுவனத்திற்குப் போட்டி நிறுவனமாக எம்1 உள்ளது. தற்போது அது ஆஸ்திரேலியப் பின்னணியைக் கொண்ட சிம்பா நிறுவனத்துடன் இணைய நடவடிக்கை எடுத்துவருகிறது. சிம்பா நிறுவனமும் கடந்த சில ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இரு நிறுவனங்களும் இணைவதால் சரியான ஒழுங்குமுறை பாதுகாப்புகள் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சர்க்கில்ஸ்.லைஃப் கூறுகிறது.
சர்க்கில்ஸ்.லைஃப் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்த படிவத்தில், “இரு நிறுவனங்களும் இணைவதால் மொத்த சந்தையை 77 விழுக்காடு கட்டுப்படுத்தும். அதேபோல் ‘போஸ்ட்பெய்டு’ சந்தையில் 38 விழுக்காட்டை அது மிஞ்சும்,” என்று குறிப்பிட்டிருந்தது.
எம்1 நிறுவனத்தைக் கெப்பல் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் எம்1 நிறுவனத்தின் தொலைபேசி வர்த்தகத்தை 1.43 பில்லியன் வெள்ளிக்கு சிம்பாவிடம் விற்கத் திட்டமிடுவதாக அறிவித்தது.
அதன்பின்னர் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அக்டோபர் மாதம் நிறுவனங்கள் இணைவது குறித்து பொதுக் கலந்துரையாடல் நடத்தியது. அது நவம்பர் 7ஆம் தேதி நிறைவடைந்தது.

