ஏப்ரல் 12ஆம் தேதிக்கும் மே 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் வட்ட ரயில் பாதையில் சேவை தாமதமாக, அதாவது காலை 9 மணிக்குத் தொடங்கும்.
இதனையடுத்து, அந்நாள்களில் காலை வேளையில் நான்கு மணி நேரத்திற்கு இரு இடைவழிப் பேருந்துச் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
36, 37 என்ற சேவை எண்களைக் கொண்ட அவ்விரு சேவைகளும் அதிகாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை இயக்கப்படும்.
ஹார்பர்ஃபிரன்ட் - பீஷான் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏழு முதல் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை என பேருந்துச் சேவை 36 இயக்கப்படும். அதுபோல, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை பீஷான் - புரொமெனாட் ரயில் நிலையங்களுக்கு இடையே பேருந்துச் சேவை 37 இயக்கப்படும்.
ரயில் பயணத்திற்கான கட்டணமே இந்த இடைவழிப் பேருந்துப் பயணங்களுக்கும் வசூலிக்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட்டப் பாதையின் ஆறாவது, இறுதிக் கட்டத் திறப்பிற்கு முந்திய சோதனைப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஏப்ரல் 12க்கும் மே 17க்கும் இடைப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த எம்ஆர்டி பாதையில் சேவை தாமதமாகத் தொடங்கும்.
வட்டப் பாதையின் ஆறாம் கட்டமானது ஹார்பர்ஃபிரன்ட் - மரினா பே நிலையங்களை இணைத்து, அப்பாதையை முழுமையாக்கும். 2026ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அதனைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

