செயலி இல்லா மின்னூட்ட வசதியை அறிமுகம் செய்த சிட்டி எனர்ஜி

2 mins read
637fd5d8-07f9-476b-9127-cc99361f37ef
செயலியைப் பயன்படுத்தாமல் கார்களுக்கு மின்னூட்டம் செய்யும் கட்டமைப்பை சிட்டி எனர்ஜி உருவாக்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எரிசக்தி விநியோக நிறுவனமான சிட்டி எனர்ஜி (City Energy) சிங்கப்பூரில் முதன்முறையாக செயலியைப் பயன்படுத்தாமல் கார்களுக்கு மின்னூட்டம் செய்யும் கட்டமைப்பை நிறுவியுள்ளது.

ஆட்டோசார்ஜ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்ளூரில் உருவாக்கப்பட்ட சிட்டி எனர்ஜி நிறுவனத்தின் செயலி இல்லா மின்னூட்டக் கட்டமைப்பு, தற்போது புல்மென் சிங்கப்பூர் ஹில் ஸ்திரீட், கிளிம்ட் கேயிர்ன்ஹில், கொமொ ‌ஷொப்பீஸ், நார்த் காயா, நார்த் பார்க் ரெசிடன்சஸ் என ஐந்து இடங்களில் அமைந்துள்ளன.

சிட்டி எனர்ஜி தீவெங்கும் தற்போது 124 மின்னூட்ட மையங்களைக் கொண்டுள்ளது.

“எங்கள் குறிக்கோள் மிக எளிமையானது. ஒரு தொலைபேசிக்கு மின்னூட்டம் செய்வதுபோல காருக்கும் மின்னூட்டம் செய்வது சுலபமாக இருக்கவேண்டும்,” என்று சிட்டி எனர்ஜி நிறுவனத் தலைமை நிர்வாகி பெர்ரி ஓங் கூறினார்.

சிட்டி எனர்ஜி, கோ பை சிட்டி எனர்ஜி (Go by City Energy) என்ற அதன் மின்னூட்டக் கட்டமைப்பை இரட்டிப்பாக்க முற்படுகிறது. 2028ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் மின்னூட்ட மையங்களில் ஐந்தில் ஒரு பங்கு செயலி இன்றி மின்னூட்டம் செய்யும் வசதியைக் கொண்டிருக்கும்.

சிட்டி எனர்ஜி கோ செயலியில் பதிவுசெய்துள்ள பயனீட்டாளர்கள் மலேசியாவிலும் தாங்கள் மின்னூட்டம் செய்துகொள்வதை எளிமையாக்க சிட்டி எனர்ஜி நிறுவனம் மலேசியாவின் இவி கன்னெக்‌‌ஷன் (EV Connection) மின்னூட்டக் கட்டமைப்பை நிர்வகிக்கும் ஜொம்சார்ஜ் (JomCharge) நிறுவனத்துடன் பங்காளித்துவ அடிப்படையில் இணைந்துள்ளது.

மலேசியாவின் ஜோகூர், கோலாலம்பூர், பினாங்கு, மலாக்கா, சரவாக் ஆகிய பகுதிகளில் 200க்கும் அதிகமான செயலி இல்லாத மின்னூட்ட வசதியை ஜொம்சார்ஜ் நிறுவியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் தனியார், குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் மின்னூட்ட மையங்களை அமைக்க சிட்டி எனர்ஜி $100 மில்லியனை முதலீடு செய்துள்ளது.

மின்னூட்ட நிலையங்கள் வெவ்வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் பல்வேறு செயலிகளைச் சமாளிக்க சிரமப்படும் மின்கார் ஓட்டுநர்களின் பிரச்சினைக்கு ஆட்டோசார்ஜ் தொழில்நுட்பம் தீர்வுகாண முயல்கிறது.

மின்கார் ஓட்டுநர்கள் வழக்கமாக மின்னூட்ட மைய நிறுவனத்தின் செயலியில் சென்று கியூஆர் குறியீட்டை வருடவேண்டும். பின் மின்னூட்டம் செய்ததற்கான கட்டணங்கள் வாடிக்கையாளர் செயலியில் பதிவுசெய்த அட்டையிலிருந்து கழிக்கப்படும்.

சிட்டி எனர்ஜி நிறுவனத்தின் பயனீட்டாளர்கள் மின்னூட்ட மையத்தில் மின்கார்களுக்கு நேரடியாக மின்னூட்டம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்