சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்ஐடி) பொங்கோல் வளாகத்தில் மொத்தம் 3,800 மாணவர்கள் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியிலிருந்து தங்கள் கல்வி ஆண்டைத் தொடங்குவர்.
இவர்கள் எஸ்ஐடியில் பயிலும் மாணவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் ஆவர்.
வர்த்தக, தொடர்பு, வடிவமைப்புத் துறை மற்றும் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கான வகுப்புகள் பொங்கோல் வளாகத்தில் தொடங்குகின்றன.
வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் நிறைவடையும்.
அதையடுத்து, எஞ்சிய மூன்று துறைகளைச் சேர்ந்த மாணவர்களையும் புதிய வளாகம் வரவேற்கும் என்று ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற்ற அறிமுக விழாவில் எஸ்ஐடி தலைவர் சுவா கீ சயிங் கூறினார்.
எஸ்ஐடியின் ஆறு துணை வளாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு பொங்கோல் வளாகம் திறக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் அப்பல்கலைக்கழகத்தின் பத்தாண்டுக் கனவு நனவாகியிருப்பதாகவும் புதிய அத்தியாயத்துக்குள் அது காலடி எடுத்து வைப்பதாகவும் திரு சுவா கூறினார்.
டோவர் டிரைவ்வில் உள்ள ஆறு வளாகங்களிலும் சிங்கப்பூரில் உள்ள பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் எஸ்ஐடிக்கு 9,000 மாணவர்கள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வளாகத்தின் அறிமுக விழாவை முன்னிட்டு 1,500 மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள், விருந்தினர்கள் எஸ்ஐடியின் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்திலிருந்தும் டோவர் வளாகத்திலிருந்தும் பொங்கோல் வளாகத்துக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை பயணம் மேற்கொண்டனர்.
அறிமுக விழாவில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார்.
மற்ற பலதுறைத் தொழிற்கல்லூரிகள், ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் குத்தகைதாரர்கள், அருகில் உள்ள பள்ளிகள், பொங்கோல் குடியிருப்பாளர்களையும் கடந்து சிங்கப்பூர் மற்றும் உலகில் உள்ள அனைவரையும் எஸ்ஐடி சென்றடைய வேண்டும் என்று திரு சான் கூறினார்.
செப்டம்பர் மாதத்திலிருந்து தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கணினிமுறை, செயலிகள் உருவாக்கம், குறியீட்டு முறை ஆகிய பாடங்களை எஸ்ஐடி அறிமுகப்படுத்த இருக்கிறது.

