அடுத்த ஆண்டு சிங்கப்பூர் 60ஆம் ஆண்டு நிறைவை எதிர்நோக்கும் வேளையில், நாட்டைத் தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்திருக்கப் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
‘பசுமையான, தூய்மையான சிங்கப்பூர்’ தினமான நவம்பர் 3ஆம் தேதியன்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) 50,000வது மரக்கன்றை நட்டு, அவர் உரையாற்றினார்.
ஏப்ரல் 2025ல், முதன்முறையாக சுற்றுப்புறச் சேவைகள் துறையில் புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டத்தை தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி, சுற்றுப்புற நிர்வாகச் சங்கம் சிங்கப்பூர், தேசியச் சுற்றுப்புற வாரியம் ஆகியவை இணைந்து தொடங்கவுள்ளதாகத் துணைப் பிரதமர் கூறினார்.
டிசம்பர் 2024 முதல் மே 2025 வரை, தேசியப் பூங்காக் கழகத்தின் 20க்கும் மேற்பட்ட நலமாக்கும் தோட்டத் திட்டங்கள் (therapeutics horticulture programmes), ஆறு நலமாக்கும் தோட்டங்களில், பொதுமக்கள் பதிவுக்குத் திறந்துவிடப்படும் என்றும் அவர் கூறினார். இது குறித்த மேல்விவரங்களை தேசியப் பூங்காக் கழக இணையத்தளத்தில் காணலாம்.
நிகழ்ச்சியில் சுற்றுப்புறச் சேவைகள் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 27 பேருக்கு வருடாந்தர சுற்றுப்புறச் சேவை நட்சத்திர விருதையும் திரு ஹெங் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தோட்டக்கலை சார்ந்த சமூகத் திட்டங்களில் துடிப்புடன் ஈடுபட்ட ஏழு புதிய ‘மலரும் சமூகம்’ (Community in Bloom) தூதர்களைத் திரு ஹெங் பணியமர்த்தினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை, வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மரம் நடும் நடவடிக்கையை வழிநடத்தினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
அதைத் தொடர்ந்து, வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் புதிய பொதுச் சுகாதார மன்ற ‘கிளீன்பாட்’ எனப்படும் குப்பை பொறுக்கும் பொருள்களுக்கான (litter picking tongs) சமூகக் கிடங்கைத் திறந்துவைத்தார் துணைப் பிரதமர் ஹெங். குடியிருப்பாளர்களும் மரம் நடுதல், துப்புரவுப் பணிகளில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“கடற்கரைகளில் குப்பை பொறுக்குவது சிங்கப்பூரில் பரவலாக நடைபெறுகிறது. ஆனால், கடற்கரையைவிட்டு சற்றுத் தொலைவில் உள்ள பூங்காப் பகுதிகளிலும் குப்பை அதிகம் காணப்படுகிறது. அதனால், அங்கு ‘கிளீன்பாட்’களை வைப்பதை நான் வரவேற்கிறேன்,” என்றார் ‘ஸ்டிரைடி’ எனும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி முகமது யாசர், 28.
குடியிருப்புப் பேட்டைகளில் வழக்கமாக சமூகத் துப்புரவுத் தொண்டூழிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவரும் இந்நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு https://www.eventbrite.sg/o/stridy-34425417805 என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
தென்மேற்கு வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மை முயற்சிகள் குறித்த கண்காட்சி என்யுஎஸ்ஸில் வைக்கப்பட்டது.
“இதுவரை நீடித்த நிலைத்தன்மை சார்ந்த பல திட்டங்களைத் தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.
“எடுத்துக்காட்டாக, 2006ல் தொடங்கிய வருடாந்தர ‘கிளீன் அப் @ சவுத் வெஸ்ட்’ திட்டம் மூலம் 1,100 டன்னுக்கும் அதிகமான மறுசுழற்சிப் பொருள்களைச் சேகரித்துள்ளோம். இது 18,300க்கும் மேற்பட்ட மரங்களைக் காப்பாற்றுவதற்கு ஈடானது,” என்றார் தென்மேற்கு வட்டார மேயரும் சமூக, கலாசார, இளையர்துறை, வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சருமான லோ யென் லிங்.