தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவுற கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகலாம்

1 mins read
d49bc0ab-1817-4350-b4db-98656e0cb6e4
கடந்த ஜூலை 22 முதல் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் பி, இ பகுதிகளில் தொடங்கிய சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட அனைத்துக் கடற்கரைகளிலும் சுத்தப்படுத்தும் பணிகள் அநேகமாக அடுத்த மாதம் நிறைவுபெறலாம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து, சுத்தப்படுத்தும் முயற்சிகள் குறித்து ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார்.

“முதற்கட்டம் நிறைவுபெற்றுள்ளது. சுத்தப்படுத்துவதற்குச் சிரமமான பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சில கடற்கரைகள் சுத்தப்படுத்தும் பணிகளின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன,” என்றார் திருவாட்டி ஃபூ.

முதற்கட்டத்தில், எண்ணெய்ப் படலங்களையும் பாதிக்கப்பட்ட கடற்கரைகளின் மேற்பரப்பில் இருந்த மாசுபட்ட மண்ணையும் அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்த கட்டம் கடினமான பகுதிகளிலிருந்து எண்ணெய்யை அகற்ற நோக்கம் கொண்டுள்ளது.

இறுதிக் கட்டங்களில், மண்ணோடு கலந்து இறுகிப்போன சிறிய எண்ணெய்ப் படலங்கள் அகற்றப்படும்.

செந்தோசாவின் சிலோசோ கடற்கரை ஆகஸ்ட் 3ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அதனைச் சுத்தப்படுத்தும் பணி ஒன்றரை மாதங்களில் நிறைவுபெற்றது.

பலவான் கடற்கரையும், தஞ்சோங் கடற்கரையும் சுத்தப்படுத்தும் பணிகள் முடிவுற்றதும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் கூறியது.

தொடர்புடைய செய்திகள்

“ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் சில பகுதிகள் நிலம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன,” என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கடற்கரைநாடாளுமன்ற உறுப்பினர்கள்கிரேஸ் ஃபூ