சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் கூடுதல் வசதிகள் பல்வேறு இடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுச் சுகாதார மன்றம் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தெரிவித்தது.
ஆக அண்மையில் கிளீன்போட் (Cleanpod) என்ற கூடம் பீஷான் கிரெஸ்டாவில் திறக்கப்பட்டுள்ளது.
பீஷான் ஸ்திரீட் 13க்கும் பூங்கா இணைப்புக்கும் அருகில் உள்ள பேட்டையில் அமைந்துள்ள கிளீன்போட் கூடம், சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கும் குடியிருப்பாளர்களுக்குக் குப்பைகளை எடுக்கும் கருவிகளும் வாளிகளையும் வழங்குகிறது.
ஒரு மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் தூய்மை 2025 இயக்கத்தின் முத்தாய்ப்பாக கிளீன்போட் கூடம் அறிமுகம் கண்டது. இயக்கத்தில் 13,000க்கும் அதிகமானோர் பங்கேற்று குடியிருப்பு வட்டாரங்கள், பூங்காங்கள், சமூக இடங்கள் போன்றவற்றில் 250க்கும் மேற்பட்ட தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கிளீன்ஹூட் முயற்சியின் ஒரு பகுதியாக 23வது கிளீன்போட் கூடம் பீஷான் கிரெஸ்டாவில் திறக்கப்பட்டது.
அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், தொண்டூழியர்களுடன் புதிதாகத் தேர்வுபெற்ற பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எலிசா சென் தூய்மைப் பணிகளில் சேர்ந்துகொண்டார்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கிளீன்போட் கூடம் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் இருந்த அவை, 2021 அக்டோபரிலிருந்து அக்கம்பக்க வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
கிளீன்போட் கூடங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்வதாகப் பொதுச் சுகாதார மன்றத் தலைவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கான கிளீன்ஹூட்@ஸ்கூல் என்ற திட்டத்தையும் பொதுச் சுகாதார மன்றம் தொடங்கியது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் உதவ பேட்டைகளில் உள்ள கிளீன்போட் கூடங்களுக்கும் மாணவர்கள் செல்ல முடியும்.
பீஷானில் உள்ள புதிய கிளீன்போட் குவோ சுவான் பிரெஸ்பிடேரியன் தொடக்கப்பள்ளிக்கும் உயர்நிலைப் பள்ளிக்கும் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.