ஃபைஷாலின் நடத்தை எதிர்பார்த்த தரத்தில் இல்லாததை ஆதாரங்கள் காட்டின: பிரதமர்

ஃபைஷாலின் நடத்தை எதிர்பார்த்த தரத்தில் இல்லாததை ஆதாரங்கள் காட்டின: பிரதமர்

2 mins read
fe658324-617c-416c-876b-756e66c4686f
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் ஜூலை 20ஆம் தேதி பதவி விலகினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிமின் நடத்தை, அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்துக்குக் குறைவாகவே இருந்தது என்பது கிடைத்த சான்றுகள், உண்மைகள் மூலம் தெளிவாகிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அவரது குழுவில் உள்ள பல முக்கிய சகாக்கள் தனிச்சையாக சான்றுகளை ஆய்வுசெய்து இதே முடிவுக்கு வந்ததாக புதன்கிழமை (ஜூலை 22) செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இதனாலேயே, பதவி விலகும் இணைப் பேராசிரியர் ஃபைஷாலின் முடிவைத் தாம் ஏற்றுக்கொண்டதாகச் சொன்னார்.

பெண் ஒருவருடன் இணையத்தில் உரையாடிய விவகாரத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து இணைப் பேராசிரியர் ஃபைஷால் விலகினார்.

இணைப் பேராசிரியர் ஃபைஷால் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிக்க தம்மால் ஆனவரை முயன்றதாக திரு வோங் சொன்னார்.

“ஆனால், இந்த விவகாரம் இரு தனிமனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விஷயமாக இல்லை. ஃபைஷாலுக்கு எதிரான புகார், பொதுவெளிக்கு வந்துவிட்டது. இருதரப்பினரும் பகிர்ந்த தகவல்களைக் கருத்தில்கொண்டு, அவற்றை உண்மைகளின் அடிப்படையில் அணுக வேண்டியிருந்தது,” என்றார் அவர்.

மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த வேறெந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதே முடிவு எடுக்கப்பட்டிருக்கும். கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டவிதிதான் என்று அவர் வலியுறுத்தினார்.

ஃபைஷால் போன்ற ஒருவரை இழப்பது வலிமிகுந்தது, கடினமானது என்ற பிரதமர், சிங்கப்பூரர்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார்.

“இந்த விவகாரம், ஃபைஷால் தமது 20 ஆண்டு அரசியல் பயணத்தில் ஆற்றிய பங்களிப்பை மறக்கடித்துவிடவில்லை. அவருக்குச் சிறப்புச் சலுகை அளிக்கலாம் என்ற விருப்பம் எழவே செய்தது. ஆனால், அப்படிச் செய்வது சிங்கப்பூருக்கு அதிக பாதிப்பையே ஏற்படுத்தும்,” என்றார் திரு வோங்.

நாட்டின் அரசியல் முறை மீதான மக்களின் நம்பிக்கையைக் காக்க இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஃபைஷால் இப்ராஹிம்பிரதமர் வோங்அமைச்சரவைபதவி விலகல்