கிளமெண்டி நூலகம் அது திறக்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படுகிறது.
தற்போது கிளமெண்டி கடைத்தொகுதியின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள நூலகத்தில் எப்போது புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பாக, தேசிய நூலக வாரியத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் சனிக்கிழமை (ஜனவரி 17) பேசினார்.
புதுப்பிப்புப் பணிகளுக்காக நூலகத்தை மூடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டதும் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அவர்.
“மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலக்கட்டத்தில் நூலகத்தின் சேவைகள் அருகில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய நூலக வாரியம் மேற்கொண்டு வருகிறது.
“வாசகர்கள் தங்களது வாசிப்பு மற்றும் கற்றலைத் தடையின்றித் தொடர அவ்வாறு செய்யப்படும். இடமாறுவதால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் அந்தப் பேச்சாளர்.
முன்னதாக, நூலகப் புதுப்பிப்பு என்பது தேசிய நூலக வாரியத்தின் தொடர் மறுஆய்வின் ஒரு பகுதி என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருந்தார்.
சமூகங்களில் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நூலகங்களின் புத்தகச் சேமிப்புகளும் சேவைகளும் உள்ளனவா என்பதை தேசிய நூலக வாரியம் தொடர்ந்து ஆராயும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்றத்தில், ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் கிளமெண்டி தொகுதியைப் பிரதிநிதிக்கும் உறுப்பினர் டேவிட் ஹோ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“கிளமெண்டி வட்டாரத்தில் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு வருவதாலும் குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதாலும் நூலகத்துக்கான தேவை அதிகரிக்கக்கூடும். அதற்கேற்ற வகையில் கிளமெண்டி நூலகம் பெரிதாக்கப்படுமா அல்லது வேறிடத்துக்கு இடமாற்றப்படுமா,” என்று திரு ஹோ கேட்டிருந்தார்.
2011ஆம் ஆண்டு 1,900 சதுரமீட்டர் பரப்பளவில் தொடங்கப்பட்ட நூலகத்தில் இதுவரை புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
நூலகத்தின் வாசகர் அதிகரிப்புக்கு அந்த வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோரும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

