கிளமெண்டி விளையாட்டரங்கைப் பயன்படுத்தும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் விரைவில் மாற்று இடங்களைத் தேட வேண்டியிருக்கும்.
43 ஆண்டுகள் பழைமையான இந்த விளையாட்டரங்கம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஜூலை 7ஆம் தேதி முதல் மூடப்பட்டு, 2030ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமையன்று (ஜூன் 1) அறிவித்துள்ளார்.
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் லீ, மறுசீரமைப்பு செய்யப்படும் விளையாட்டரங்கில் புதிய ஓட்டப் பந்தயத் தளம், சாஃப்ட்பால் திடல், பேஸ்பால் அல்லது காற்பந்து விளையாடுவதற்கான பன்னோக்கு மைதானம் மற்றும் கூரையிடப்பட்ட விளையாட்டு மைதானங்கள் போன்ற பல நவீன வசதிகள் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தங்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அருகிலுள்ள கிளமெண்டி விளையாட்டு மையம், ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கம், புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கம் ஆகிய மாற்று இடங்களைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து சமூகத்துக்கு உகந்த ஒரு சிறந்த இடத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தற்போது, நாட்டின் மிகப் பழமையான விளையாட்டு வசதிகளில் ஒன்றான இந்த கிளமெண்டி விளையாட்டரங்கில் புல் திடல், உடற்பயிற்சிக் கூடம், எட்டுத் தடங்களைக் கொண்ட ஓட்டப் பந்தயத் தளம் ஆகியவை உள்ளன.

