தென்கிழக்காசியாவில் வசிப்போர், பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளுக்குப் பொதுவாக ஆதரவு தெரிவிப்பது போல் தோன்றுவதாகப் புதிய அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தள்ளிப்போடலாம் என்று அவர்கள் கருதுவதாகவும் அறிக்கை சுட்டியது. சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட கருத்தாய்வின் அறிக்கை வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) வெளியிடப்பட்டது.
நிலக்கரியைப் பயன்பாட்டிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்பதற்கான ஆதரவு 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் படிப்படியாகக் குறைந்தது. மாறாக, அதனை 2030க்கும் 2040க்கும் இடைப்பட்ட காலத்திற்குத் தள்ளிப்போடுவதற்கான ஆதரவு கூடியது.
படிம எரிபொருள்களில் ஆக அதிக மாசு கொண்டது நிலக்கரி. 2023ஆம் ஆண்டில் ஆசியானின் எரிசக்தித் துறை வெளியிட்ட கரியமிலவாயுக்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுக்கு அதுவே காரணம். 2022ல் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, உலக அளவில் எரிசக்தியின் விலை அதிகரித்தது. அதனால் தென்கிழக்காசியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் வாழ்க்கைச் செலவு கூடியது.
வட்டாரத்தில், குறைந்த வருமானம் ஈட்டுவோரிடையே கரிம வரி குறித்தும் படிம எரிபொருள்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவது பற்றியும் அதிகத் தயக்கம் நிலவியது. அவர்கள் எரிசக்திக் கட்டணங்கள் கூடுமோ என்று கவலைப்படுகின்றனர்.
கருத்தாய்வு, ஐந்தாண்டு நீடித்தது. அதில் ஆசியானின் 10 நாடுகளைச் சேர்ந்த 7,600க்கும் மேற்பட்டோரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பருவநிலை மாற்றம் குறித்த வட்டாரவாசிகளின் மனப்போக்கு எவ்வாறு உள்ளது என்பதைக் கணிப்பது கருத்தாய்வின் நோக்கம்.
உலக அளவில் வெப்பவாயுக்களைக் குறைக்க மூன்று முக்கிய நடவடிக்கைகள் தீர்வாக அமையக்கூடும் என்று கருதப்பட்டது. நிலக்கரியைக் கட்டங்கட்டமாக அகற்றுவது, படிம எரிபொருள்களுக்கான சலுகைகளை நீக்குவது, கரிமத்திற்கு விலையை நிர்ணயிப்பது ஆகியவையே அவை.
ஆனால், பருவநிலை மாற்றம் குறித்த வட்டாரவாசிகளின் மனப்போக்கு வேறு விதமாக இருக்கிறது. அதிகமானோருக்குப் போதிய மின்வசதி இல்லை என்பதும் வாழ்க்கையில் மற்ற முக்கியச் செலவுகள் இருக்கின்றன என்பதும் கருத்தாய்வில் தெரியவந்தது. அதனால் அவர்களிடையே தயக்கம் நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கருத்தாய்வை முன்னெடுத்த ஐசிஸ் - யூசோஃப் இஷாக் நிலையம், அறிக்கையை வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்டது. சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் புத்தாக்க நகரங்களுக்கான லீ குவான் யூ நிலையம் அறிக்கைக்குப் பங்களித்திருக்கிறது.

