பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் வெள்ளப் பாதுகாப்பு, குளிரூட்டுக் கட்டமைப்புகள் போன்ற தீர்வுகளைப் பின்பற்றுவதற்கான தேவை அதிகரிக்கும் என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் அவற்றின் மூலம் US$9 டிரில்லியன் (S$11.7 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’யின் அண்மைய அறிக்கை அவ்வாறு கூறுகிறது.
தற்போது இந்தத் துறை US$9 டிரில்லியன் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.
பருவநிலை தொடர்பான நடவடிக்கை எனும்போது கரிம நீக்கத்தில், அதாவது கரிம வெளியேற்றத்தைக் குறைத்தலில் முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது.
இருப்பினும், பருவநிலை மாற்றம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகையில் அதைச் சமாளிப்பதற்குத் தயார்ப்படுத்தும் முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. அது தொடர்பான உத்திகளுக்கான தேவை, பருவநிலையால் ஏற்படும் பேரழிவுக்குப் பிறகு அதிகரிக்கிறது.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்குத் தயார்ப்படுத்தும் தீர்வுகளில் தனியார் துறை பங்களிப்பு குறித்து ‘ஜிஐசி’யின் அண்மைய அறிக்கை விவரிக்கிறது.
கடல்மட்ட உயர்விலிருந்து பாதுகாக்க கடலோரச் சுவர்களை எழுப்புதல் போன்ற தீர்வுகள் பொதுவாக அரசாங்கங்களின் பொறுப்பு என்ற கண்ணோட்டம் நிலவுகிறது.
ஆனால், இத்தகைய தீர்வுகளை வழங்கும் நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புகளுக்கு உறுதியளிப்பதாக ‘ஜிஐசி’ அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல், சமூக மீள்திறனுக்கு முதலீட்டாளர்கள் பங்களிக்க இது வாய்ப்பளிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
உலக வானிலை அமைப்பு, கடந்த ஆண்டை (2024) ஆக வெப்பமான ஆண்டாக அறிவித்தது.
கடுமையான வானிலை, பருவநிலையால் 1970ஆம் ஆண்டு முதல் 2021 வரை கிட்டத்தட்ட 12,000 பேரழிவுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் US$4.3 டிரில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் அது இன்னும் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.