ஜூரோங் பாயின்ட்டில் ‘கிடி பேலஸ்’ மூடல்

ஜூரோங் பாயின்ட்டில் ‘கிடி பேலஸ்’ மூடல்

2026ல் மூடப்படும் நான்காவது கிடி பேலஸ் கிளை
1 of 3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Nov 2026 - 5:53 pm

1 mins read

ஜூரோங் பாயின்ட் கடைத்தொகுதியில் உள்ள கிடி பேலஸ் குழந்தைப் பொருள்கள் கடையின் கிளை மூடப்படவுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 12) ஃபேஸ்புக் ரீல்ஸ்வழி தெரிவித்தது. அக்கிளைக்குச் சென்றுவரும் வாடிக்கையாயளர்களுக்கு கிடி பேலஸ் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.

பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் குழந்தைப் பொருள்களுக்குப் பிரபலமாக இருந்துவரும் கடையான கிடி பேலஸ் இவ்வாண்டு இதுவரை மூன்று கிளைகளை மூடிவிட்டது. ஜூரோங் பாயின்ட்டில் உள்ள கிளை இவ்வாண்டு மூடப்படவிருக்கும் நான்காவது கிளையாகும்.

செஞ்சுரி ஸ்குவேர், காம்பஸ் ஒன் ஆகியவற்றில் இருக்கும் கிடி பேலஸ் கிளைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடப்பட்டன. பிறகு லோட் ஒன் கடைத்தொகுதியில் இருக்கும் கிளை செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. அக்கிளைகள் மூடப்படுவதையொட்டி விலைக்கழிவை வழங்குவதாக கிடி பேலஸ் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தது.

இப்போது ஜூரோங் பாயின்ட் கிளையிலும் கிடி பேலஸ் விலைக்கழிவு வழங்குகிறது. விலைக்கழிவு இடம்பெறும் கடைசி நாள் வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி என்று அந்நிறுவனம் ஃபேஸ்புக் ரீல்ஸ்வழி தெரிவித்தது. 1994லிருந்து 2026ஆம் ஆண்டு வரையிலான காலம் ‘நினைவுகளைக் குவித்த 32 ஆண்டுகள்’ என்று கிடி பேலஸ் அந்தப் பதிவில் குறிப்பிட்டது.

கிடி பேலஸ், 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும் அதன் முதல் கடை நார்த்போய்ன்ட் கடைத்தொகுதியில் அமைந்திருந்ததாகவும் அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கடைவர்த்தகம்மூடல்குழந்தைவிற்பனைசில்லறை விற்பனை