சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான நாசி பாடாங் உணவகமான ‘வாராங் நாசி பாரியாமன்’ ஏறக்குறைய 78 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (ஜனவரி 31) தனது வியாபாரத்தை மூடுவதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
இந்த உணவகத்தை நடத்தி வரும் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் மாற்று வழிகளை ஆராயவும் அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உணவகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது அல்லது அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேறு ஏதேனும் உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சுல்தான் மசூதிக்கு அருகில், 738 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஒரு கடைவீட்டில் இந்த உணவகம் அமைந்துள்ளது.
இது நிரந்தரமாக மூடப்படும் என்று அதன் உரிமையாளர்கள் ஜனவரி 21ஆம் தேதி தெரிவித்திருந்தனர்.
பாரம்பரிய வணிகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் யுஆர்ஏ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காம்போங் கிளாம், லிட்டில் இந்தியா, சைனாடவுன் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உள்ள கடைவீடுகளின் சராசரி வாடகை கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுவாக ஒரு மிதமான வேகத்திலேயே அதிகரித்துள்ளதாக யுஆர்ஏ தெரிவித்தது.
ஓர் ஆண்டுக்கு கம்போங் கிளாமில் 2 விழுக்காடும், லிட்டில் இந்தியாவில் 2.5 விழுக்காடும், சைனா டவுனில் ஒரு விழுக்காடும் வாடகை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து வணிகங்களைப் போலவே, ஊழியர்கள், மூலப்பொருள்களுக்கான உயரும் செலவுகள், ஆள் பற்றாக்குறை, நுகர்வோரின் தேவையில் மாற்றம் ஏற்படுவது போன்ற பல்வேறு சவால்களையும் பாரம்பரிய வணிகங்களும் எதிர்நோக்குவதை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்று யுஆர்ஏ கூறியது.
பாரம்பரிய வணிகங்களை ஆதரிக்க பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

