வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கான தளத்தை மில்டோனியா குளோஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்டுள்ளது.
ஈசூனில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் ஏறக்குறைய 430 வீடுகள் கட்டப்படலாம். இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தில் உள்ள 10 இடங்களில் மில்டோனியா குளோஸ் தளமும் ஒன்று.
கிட்டத்தட்ட 15,451.2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்தத் தளத்தில் 90 மீட்டர் உயரம் வரை கட்டடத்தை எழுப்பிக்கொள்ளலாம். அதன் குத்தகைக் காலம் 99 ஆண்டுகள்.
மில்டோனியா குளோஸ் பகுதி ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பிற்கு அருகில் இருப்பதால் சிலேத்தார் நீர்த்தேக்கத்தைக் காணக்கூடியதாக உள்ளது என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
புதிய தளத்திற்கு மூன்றிலிருந்து ஆறு நிறுவனங்கள் குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குத்தகைக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடையும்.

