தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய திறனாளர்களை ஈர்க்க கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவு

2 mins read
04a3a687-2031-49e5-98f1-7696008b15ec
சிங்கப்பூர் கூட்டுறவு இயக்கம் 100 ஆண்டுகால அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியதை கொண்டாடும் நிகழ்ச்சியில் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (நடுவில்) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: சிங்கப்பூர் தேசிய கூட்டறவுச் சம்மேளனம்

கூட்டுறவுச் சங்கங்கள் சமூகத்தில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் சிங்கப்பூர் பரிணாமம் கண்டு பல சவால்களை எதிர்கொண்ட தருணங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்ததாகவும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் கூட்டுறவு இயக்கம் 100 ஆண்டுகால அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) ‘ஒன் ஃபேரர்’ ஹோட்டலில் நிகழ்ச்சி இடம்பெற்றது.

நிகழ்ச்சியைச் சிறப்பித்த திரு தினேஷ், 100வது ஆண்டைக் கொண்டாடும் மூன்று கூட்டுறவுச் சங்கங்களைத் தமது உரையில் பாராட்டினார்.

1920களிலேயே அந்தச் சங்கங்கள் ‘நாம்’ என்ற ஒற்றுமை உணர்வை வெளிக்காட்டத் தொடங்கியதாகச் சொன்னார்.

மனிதவள துணை அமைச்சருமான திரு தினேஷ், தற்போது 60க்கும் மேம்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உறுப்பினர்களின் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

“லாபத்தை மட்டும் பார்க்காமல் அர்த்தமுள்ள நோக்கங்களுடன் தொழில்கள் செயல்படும் போது கூட்டுறவுச் சங்கங்கள் அவர்களின் உறுப்பினர்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தூக்கி நிறுத்தச் செயல்படுகின்றன,” என்று திரு தினேஷ் குறிப்பிட்டார்.

கூட்டுறவுச் சங்கங்களின் மாற்றத்திற்கான 10 ஆண்டுகால திட்ட வரைவின் நான்கு உத்திபூர்வ தூண்கள் விளக்கப்பட்டன.

நம்பகமான, தொழில்முறை மதிப்புமிக்க தலைவர்களை ஈர்த்து வளர்ப்பது, கூட்டுறவுச் சங்கங்களின் ஆளுமையையும் பொறுப்புணர்வையும் வலுவாக்குவது, செயல்பாட்டுச் சிறப்பை மேம்படுத்துதல், விரிவாக்கத் திறன்களை உருவாக்குவது, சிங்கப்பூர் கூட்டுறவு இயக்கத்திற்குப் பின்னால் அதிக இளையர்களை ஒன்றிணைப்பது ஆகியவை அந்த நான்கு தூண்களாகும்.

“வலுவான தலைமைத்துவம் தான் கூட்டுறவு சங்கங்கள் மாற்றங்களுக்குத் தங்களை தகவமைத்துக்கொள்வதற்கான தன்னம்பிக்கையை அளிக்கிறது,” என்று கூறினார் திரு தினேஷ்.

தலைமைத்துவத்தை வலுவாக்குவது குறித்தும் பேசிய திரு தினேஷ், புதிய கூட்டுறவுச் சங்க தலைவர்கள் திட்டம் மூத்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்றார்.

மேலும், வளர்ந்து வரும் தலைவர்கள் திட்டம் மேம்படுத்தப்படும் என்று கூறிய திரு தினேஷ், சிங்கப்பூர் கூட்டுறவு இயக்கம் வழிகாட்டிக் கூட்டுறவு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இந்தப் புதிய திட்டம், மூன்று முதல் பத்து ஆண்டுகள் அனுபவமுள்ள 150 கூட்டுறவுத் தலைவா்களுக்குத் தலைமைத்துவம், வணிக மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்த உதவும்.

மேலும், வெளிநாட்டுப் பயணங்கள். உத்திபூர்வ திறன்கள், வழிகாட்டுதலைப் பெறும் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி தலைவர்கள் தங்களது கூட்டுறவுச் சங்கங்களுக்கும், பெரிய இயக்கத்துக்கும் திறம்பட பங்களிக்க உதவுகிறது.

சிங்கப்பூர் ஆணைபெற்ற கழகங்கள் ஊழியர்களின் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ். குலாம், 10 ஆண்டுகால திட்டவரைவு வரவேற்கத்தக்க முயற்சி என்றும் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தகவமைத்துக்கொள்வது அவசியம் என்றும் கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்க ஊழியர் உதவிநிதி கூட்டுறவு சங்க தலைவர் ஜான் ராகவனுடன், திரு எஸ். குலாம் (வலது)
சிங்கப்பூர் அரசாங்க ஊழியர் உதவிநிதி கூட்டுறவு சங்க தலைவர் ஜான் ராகவனுடன், திரு எஸ். குலாம் (வலது) - படம்: அனுஷா செல்வமணி
குறிப்புச் சொற்கள்