இளையர்களுக்கு வேலை குறித்து வழிகாட்டிய இணை-சிண்டா கருத்தரங்கு

இளையர்களுக்கு வேலை குறித்து வழிகாட்டிய இணை-சிண்டா கருத்தரங்கு

1 of 2
படம்: சிவாய
படம்: சிவாய

14 Nov 2026 - 7:07 pm

5 mins read

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கணினிகளின் அறிமுகம் உலகம் எவ்வாறு இயங்கியது என்பதையே மாற்றியமைத்தது.

இன்று, செயற்கை நுண்ணறிவு மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்த வருகிறது.

இதனால், வேலை கிடைக்குமா என்ற அச்சம் மக்களிடையே, குறிப்பாக, இளம் பட்டதாரிகளிடையே நிலவி வருவதாக அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார் கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

ஆயினும், மனிதர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வு செயற்கை நுண்ணறிவு அல்ல என்றும் இவை அனைத்தும் கருவிகளே என்றும் அவர் கூறினார்.

இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவும் (இணை) சிண்டாவும் இணைந்து ஏற்பாடு செய்த இணை-சிண்டா வாழ்க்கைத்தொழில் பாதைகள் கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

இவ்வாண்டு ஜூன் நிலவரப்படி, சிங்கப்பூரின் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்றவர்களில் 20 விழுக்காட்டினர் தொடர்ந்து வேலை வாய்ப்பைத் தேடுவதாக மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில், இளையர்கள் பட்டம் பெற்று பணியிடத்தில் அடியெடுத்து வைக்கும்போது, பணியிடத்தில் தழைக்க துறை சார்ந்த அறிவுரையும் ஆதரவும் அவர்களுக்குக் கிட்டுவது இன்றியமையாதது.

அத்தேவையைப் பூர்த்திசெய்யவே இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகப் பகிர்ந்தார் சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்.

“செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, வேலை கிடைக்குமா என்ற அச்சம் மாணவர்களிடையே உள்ளது. படித்து பட்டம் பெறுவது வேலை கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமன்று,” என்றார் அவர்.

ஆகவே, பிற திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் துறை சார்ந்த வல்லுநர்களோடு இணைந்து தேவையான வழிகாட்டுதலையும் வழங்கும் நோக்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“ஒத்த இலக்குடைய அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து, நம் சமூகம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க இணை அமைப்பு பெரிதும் கைகொடுக்கிறது,” என்று கூறினார் திரு அன்பரசு.

கோப்தோர்ன் கிங்ஸ் ஹோட்டலில் சனிக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இளையர்களும் 30 நிறுவனப் பங்காளிகளும் கலந்துகொண்டனர்.

நற்பணிப் பேரவை இளையர் பிரிவு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழர் பேரவை, சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை, தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளும் நிகழ்ச்சியின் இணைப் பங்காளிகளாக இணைந்திருந்தன.

திரு தினேஷ் வாசு தாஸ், பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநரும் நிறுவன உத்திகளுக்கும் தலைவரான குமாரி ராணி கோர், சிண்டா இளையர் மன்றத்தின் தலைவர் குமாரி தாஷெணி சண்முகம் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

ஒருவரைப் பணியமர்த்துவதற்கு முன்பு அவருடைய முந்தைய வேலை அனுபவத்தைக் கருத்தில்கொண்டாலும் அவரிடம் உள்ள வேட்கை, தன்முனைப்பு இரண்டையும் கவனிப்பதாகக் குறிப்பிட்டார் குமாரி ராணி கோர்.

தற்போதைய முதலாளியைத் தற்செயலாக விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியதால், அவருடைய நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கான வாயப்பு கிடைத்ததாகப் பகிர்ந்த குமாரி தாஷெணி, பிறரோடு கொண்டுள்ள தொடர்புகளை விரிவுப்படுத்தி, வலுப்படுத்துமாறு இளையர்களை ஊக்குவித்தார்.

மனித நூல்கள் எனும் மாறுப்பட்ட அங்கத்திற்கு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நூலகத்தில் எவ்வாறு நூல்களைப் புரட்டிப் பார்த்து, அவற்றின்மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்ள இயலுமோ, அதைப்போலவே ஒவ்வொரு துறையிலும் தடம்பதித்து வரும் வல்லுநர்களை ‘இரவல் பெற்று’, அவர்களிடம் பேசுவதற்கு ஏற்றவாறு அங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

‘நீங்கள் அறியாத வேலைகள்’, ‘பட்டப்படிப்பு முடிந்து வாழ்க்கை’, ‘கனவா? பணமா?’ போன்ற எட்டு வெவ்வேறு தலைப்புகளில் மனித நூல் அங்கங்கள் இடம்பெற்றன.

“ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் கடந்துவந்த பாதை சிரமமாக இருக்கலாம். அவ்வனுபவங்களைப் பற்றி இளையர்களிடம் பகிரும்போது, இளையர்கள் அத்துறை குறித்த ஒருவிதத் தெளிவைப் பெறுவர், அந்தப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது,” என்று மனித நூல்கள் அங்கம் குறித்து திரு அன்பரசு விளக்கினார்.

மனித நூல்களுள் ஒருவராக இளையர்களிடம் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ‘சிக்கி’யின் நிர்வாகி வீணா சுப்பிரமணியம்.

“இளையர்களில் ஒரு சிலருக்குத் தயக்கம் இருக்கலாம். என்னுடைய துறையில் சேர விரும்பும் வேறு சில இளையர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர், தங்களால் முடியும் என்று நம்புகின்றனர். மாற்றத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்பவர்களையே நாங்கள் வேலைக்குத் தேடுகிறோம். ஒவ்வொரு சூழலையும் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை நான் இன்று இளையர்களிடம் பகிர்ந்தேன்,” என்றார் வீணா.

இளையர்களில் பலர் பிற வேலைவாய்ப்பு கண்காட்சிகளுக்குச் சென்றிருந்தாலும், இந்நிகழ்ச்சி சற்று மாறுபட்டதாக அமைந்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

“நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, சில நிறுவனங்கள் தங்களுடைய கூடங்களை அமைத்திருந்தனர். அந்நிறுவனங்களில் ஒன்றான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிறர் முன்னிலையில் கேள்விகள் கேட்பதற்கும் தனிப்பட்ட முறையில் ஐயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வதிலும் நிறைய வித்தியாசம் உண்டு,” என்றார் தேசிய சேவையாளர் ரகு ஶ்ரீராம்.

“வாய்ப்புகள் ஏராளம், அவற்றைப் பயன்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது,” என்பதே தமது பெரிய படிப்பினை என்றும் குறிப்பிட்டார் ஶ்ரீராம்.

மனித நூல்களில் எந்தெந்த பகிர்வுகளுக்குச் செல்லலாம் என்ற வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது தமக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறினார் சிங்கப்பூர் பலதுறைத்தொழிற்கல்லூரியில் வேதிப் பொறியியல் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவி ராமமூர்த்தி எழில் விழி.

“பிற்காலத்தில், நான் படித்த துறையிலேயே வேலை பார்ப்பேன் என்று திட்டமிட்டுள்ளேன். ஆனால், என்னுடைய துறை போட்டித்தன்மை நிறைந்ததாக இருப்பதால், அதில் தாக்குப்பிடிக்க கல்வி மட்டும் போதாது என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் அவர்.

மேலும், துறைசார்ந்த திறன்களைத் தாண்டி பிற திறன்களையும் வளர்த்துக்கொண்டு விரிவுபடுத்த வேண்டும் எனும் கருத்து தம்மைச் சிந்திக்க வைத்ததாகக் குறிப்பிட்டார் எழில் விழி.

ரிபப்ளிக் பலதுறைத் தொழில்கல்லூரியில் பயிலும் மஹதி வாஞ்சிநாதனுக்கு பிற்காலத்தில் என்ன வேலை செய்யலாம் என்ற கேள்விக்குறி பல நாள்களாகவே இருந்தது.

அது குறித்து கூடுதல் தெளிவைப் பெற இந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

மனித நூல்கள் அங்கத்தில், ‘நீங்கள் அறியாத பணிகள்’ எனும் பகிர்வில் கலந்துகொண்டபோது, ஓர் இலக்கை அடைய பல வழிகள் உண்டு எனும் கருத்து வலியுறுத்தப்பட்டதாகக் கூறினார்.

அதுமட்டுமன்றி, பிறரிடம் தயங்காமல் பேசி, தம்முடைய வட்டத்தை விரிவுபடுத்தவதன் அவசியத்தையும் கற்றுக்கொண்டதாக மஹதி கூறினார்.

இந்தக் கருத்தரங்கைத் தாண்டி, பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதலும் பயிற்சி வேலைவாய்ப்புகளும் வழங்க சிண்டாவும் அதன் பங்குதாரர்களும் திட்டமிட்டுள்ளன.

கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு வந்திருந்த பங்கேற்பாளர்களிடையே அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்களில் 30 விழுக்காட்டினருக்கு கருத்தரங்கு முடிந்து மூன்று மாதங்களுக்குள் நல்ல வாய்ப்புகள் கிட்டும் என்றும் சிண்டா நம்புகிறது.

குறிப்புச் சொற்கள்