சிங்கப்பூரில் செயல்படும் கோகோ கோலா நிறுவனம் அதன் அதிகரிக்கும் தேவையை ஈடுகட்டும் விதமாக 2021ஆம் ஆண்டில் தானியக்கத் தீர்வுகளை அறிமுகம் செய்தது.
தானியக்க முறையில் செயல்படும் பளுதூக்கிகளும் அந்தத் தீர்வுகளில் அடங்கும். சுழலுக்கு ஏற்ப செல்லும் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த தானியக்க வாகனங்கள் அதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இந்த முறையின்கீழ் ஊழியர்கள் பளு தூக்கும் நடைமுறைகள் 33 விழுக்காடு குறைந்தன.
இத்தகைய முயற்சிகளுக்காக கோகோ கோலா நிறுவனம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளியல் அமைப்பின் உலகளாவிய வழிகாட்டிக் கட்டமைப்பு (World Economic Forum’s Global Lighthouse Network) அந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நான்காவது தொழிலியல் புரட்சித் தொழில்நுட்பங்களில் முன்னோடியாகச் செயல்படும் தொழில்துறை நிறுவனங்களை அது அங்கீகரிக்கிறது.
கோகோ கோலா நிறுவனத்தின் தானியக்க முயற்சிகளை, புதன்கிழமை (அக்டோபர் 22) அதன் தொழிற்சாலையைப் பார்வையிட்டபோது துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் பாராட்டினார்.
அந்தத் தொழிற்சாலையில் கோகோ கோலா பானங்களுக்கான அடிப்படைச் சாறு அடர்த்தியான நிலையில் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து பின்னர் அது பானங்களைப் போத்தல்களில் அடைக்கும் உலகளாவிய நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
கோகோ கோலா நிறுவனம் தொடர்ந்து சிங்கப்பூரில் முதலீடு செய்வதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், “சிங்கப்பூரை இந்த வட்டாரத் தலைமையகமாகவும் கோகோ கோலா குழுமத்தின் மிக முக்கிய உத்திபூர்வ தயாரிப்புத் தலமாகவும் அது தொடர்ந்து கட்டமைத்து வருகிறது,” என்றார்.
2021ஆம் ஆண்டு, நிறுவனம் அதன் செயலாக்கப் பிரிவுகள் அனைத்திலும் மின்னிலக்க உருமாற்றத்தை மேற்கொண்டது. உலகெங்கும் உள்ள அதன் தொழிற்சாலைக் கட்டமைப்புகளில் இந்த உருமாற்றத்திற்குத் தலைமைதாங்கும் வழிகாட்டித் தொழிற்சாலைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஆலைகளில் சிங்கப்பூர்த் தொழிற்சாலையும் அடங்கும் என்று கோகோ கோலா கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உருமாற்றம் தொடங்கியதிலிருந்து செயல்திறன் 28 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் ஊழியர் உற்பத்தித் திறன் 70 விழுக்காடு மேம்பட்டிருப்பதாகவும் சரியான நேரத்தில் விநியோகம் செய்யும் திறன் 31 விழுக்காடு கூடியிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

