பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (COE) கட்டணம், புதன்கிழமை (நவம்பர் 19), 12.9 விழுக்காடு அதிகரித்து $129,890ஆனது. கடந்த இரு ஏலங்களில் அது குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிய கார்களுக்கான ‘ஏ’ பிரிவு தவிர மற்ற பிரிவுகள் அனைத்திற்கும் ‘சிஓஇ’ கட்டணம் அதிகரித்தது. சிறிய கார்களுக்கான கட்டணம் $109,000ஆகச் சரிந்தது. சென்ற ஏலத்தில் அது $110,002ஆகப் பதிவாகியிருந்தது.
சிறிய கார்களும் மின்வாகனங்களும் ‘ஏ’ பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கான ‘சிஓஇ’ கட்டணம் 0.9 விழுக்காடு குறைந்தது.
பெரிய கார்கள், மின்வாகனங்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம் சென்ற ஏலத்தில் $115,001ஆக இருந்தது.
பொதுப் பிரிவு (E) வாகனங்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம் 3.3 விழுக்காடு கூடி $125,001ஆனது. பொதுப் பிரிவின்கீழ் மோட்டார்சைக்கிள்கள் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தையும் பதிவு செய்யலாம் என்றபோதும் பொதுவாகப் பெரிய கார்கள் மட்டுமே இப்பிரிவில் பதிவு செய்யப்படுகின்றன.
‘சி’ பிரிவின்கீழ் வர்த்தக வாகனங்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம் 0.5 விழுக்காடு அதிகரித்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணம் 1.5 விழுக்காடு கூடி $8,729ஆகப் பதிவானது.
ஏலத்தின் முடிவில், ‘சிஓஇ’ கட்டணங்கள் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாகக் கூறிய நிலப் போக்குவரத்து ஆணையம், தேவை அதிகமாக இருப்பதை இது காட்டுவதாகக் குறிப்பிட்டது.

