சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (சிஓஇ) 9.8 விழுக்காடு குறைந்தது.
முந்திய ஏலக்குத்தகையில் $122,000ஆக இருந்த ‘ஏ’ பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம், புதன்கிழமை (நவம்பர் 4) நடந்த ஏலக்குத்தகையில் $110,002ஆகச் சரிந்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் இறக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதத்தின் முதலாவது ஏலக்குத்தகையிலிருந்து ஏற்றம் கண்டுவந்த ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம், அக்டோபர் மாத முதலாவது ஏலக்குத்தகையில் $128,105 என உச்சம் தொட்டது.
அண்மைய ஏலக்குத்தகையில் அனைத்துப் பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் சரிவைச் சந்தித்தது.
அவ்வகையில், பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவு சிஓஇ கட்டணம் $131,889லிருந்து 12.8 விழுக்காடு குறைந்து, $115,001ஆக முடிந்தது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 11 விழுக்காடு சரிந்தது. அதாவது, அக்டோபர் 23ஆம் தேதி நடந்த ஏலக்குத்தகையில் $136,000ஆக முடிந்த அக்கட்டணம், அண்மைய ஏலக்குத்தகையில் $121,010ஆகக் குறைந்தது. மோட்டார்சைக்கிள் தவிர்த்த அனைத்து வாகனங்களுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் என்றாலும் பெரும்பாலும் பெரிய கார்களுக்கே பயன்படுத்தப்படுகிறது.
இரு வாரங்களுக்குமுன் $76,801ஆக முடிந்த வணிக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவு சிஓஇ கட்டணம், ஒரு விழுக்காடு $76,000ஆக இறக்கம் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் சிஓஇ கட்டணம் $9,389லிருந்து 8.4 விழுக்காடு குறைந்து $8,600ஆக முடிந்தது.

