‘சிஓஇ’ கட்டணம்: ‘பி’, பொதுப் பிரிவுகளில் 13 மாதங்கள் இல்லாத அளவு உயர்வு

2 mins read
aa5fde31-e49c-4033-83d5-bdb4eb79a3e2
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு ‘பி’ பிரிவில் சிஓஇ கட்டணம் இவ்வளவு அதிகமாகப் பதிவானதில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுக்கான முதல் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஏலத்தில் பெரிய கார்கள், பொதுப் பிரிவில் இடம்பெறும் வாகனங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் கடந்த 13 மாதங்களில் காணப்படாத அளவில் அதிகமாகப் பதிவாயின.

பெரிய, கூடுதல் சக்திவாய்ந்த கார்கள், மின்சார கார்களுக்கான ‘பி’ பிரிவில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 121,501 வெள்ளியாகப் பதிவானது. அக்கட்டணம், சென்ற மாதம் 18ஆம் தேதி இடம்பெற்ற சிஓஇ நடவடிக்கையில் பதிவானதைக் காட்டிலும் 11.5 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு ‘பி’ பிரிவில் சிஓஇ கட்டணம் இவ்வளவு அதிகமாகப் பதிவானதில்லை.

பொதுப் பிரிவான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 12.9 விழுக்காடு கூடி 123,000 வெள்ளியாகப் பதிவானது. ஐந்து வாகனப் பிரிவுகளிலும் ‘இ’ பிரிவில்தான் கட்டணம் ஆக அதிக உயர்வு பதிவானது.

‘பி’ பிரிவில் இடம்பெற்றதைப்போல் இப்பிரிவிலும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு கட்டணம் ஆக அதிகமாகப் பதிவானது.

மோட்டார் சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் சிஓஇ கட்டணம் 7.4 விழுக்காடு அதிகரித்து 9,001 வெள்ளியாகப் பதிவானது. சிறிய, குறைந்த சக்திகொண்ட கார்களுக்கும் மின்சார கார்களுக்குமான ‘ஏ’ பிரிவில் கட்டணம் 2.4 விழுக்காடு குறைந்து 93,699 வெள்ளியாகப் பதிவானது.

வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் கட்டணம் 69,890லிருந்து குறைந்து 67,891 வெள்ளியாகப் பதிவானது.

கடந்த ஏலத்தில் பெரிய கார் பிரிவிலும், பொதுப் பிரிவிலும் கூடுதலாக 27.6 விழுக்காடு ஏலம் கோரப்பட்டது. ஒப்புநோக்க, ‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான ஏல எண்ணிக்கை 8.3 விழுக்காடு குறைந்தது.

பிப்ரவரியிலிருந்து அடுத்த சில ஆண்டுகளுக்குக் கூடுதலாக 20,000 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்