இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்துக்குக் கூடுதலாக 469 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஏலக்குத்தகைக்கு விடப்படும்.
இந்த எண்ணிக்கை, முந்தைய மூன்று மாத காலத்தில் ஏலக்குத்தகைக்கு விடப்பட்ட சிஓஇ சான்றிதழ்களைவிட 2.6 விழுக்காடு அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 18,701 சிஓஇ சான்றிதழ்கள் ஏலக்குத்தகைக்கு விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 28) கூறியது. கடந்த மே முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஏலக்குத்தகைக்கு விடப்பட்ட சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை 18,232.
சிறிய, குறைந்த சக்திகொண்ட ‘ஏ’ பிரிவில் விடப்படும் சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதிகரித்து 7,586ஆகப் பதிவாகிறது.
பெரிய, கூடுதல் சக்திவாய்ந்த கார்களுக்கும் மின்சார கார்களுக்குமான ‘பி’ பிரிவிலும் ஏலக்குத்தகைக்கு விடப்படும் சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு கூடி 4,737ஆகப் பதிவாகிறது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவிலும் இந்த எண்ணிக்கை ஒரு விழுக்காடு கூடி 1,642ஆக உயர்கிறது.
மோட்டார் சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. அப்பிரிவில், எண்ணிக்கை தொடர்ந்த 3,198ஆக இருக்கிறது.
மோட்டார் சைக்கிள்களைத் தவிர எல்லா வகை வாகனங்களையும் உள்ளடக்கக்கூடிய ‘இ’ பிரிவில் சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை பெரிய அளவில் 27.2 விழுக்காடு அதிகரித்து 1,538ஆகப் பதிவாகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏலக்குத்தகைக்கு விடப்படும் சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை, குறிப்பாக முந்தைய 12 மாதங்களில் பதிவுகளிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இருக்கும். மேலும், வரும் ஆண்டுகளில் கூடுதலாக ஏலக்குத்தகைக்கு விடப்படவுள்ள சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை போன்ற அம்சங்களும் கருத்தில்கொள்ளப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து நிலப் போக்குவரத்து ஆணையம், வர்த்தக வாகனங்களுக்கான பிரிவைத் தவிர எல்லாப் பிரிவுகளிலும் வாகன எண்ணிக்கை அறவே அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டுள்ளது. வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 0.25 விழுக்காடு அதிகரிக்க அனுமதி உண்டு.