வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தபோதிலும், புதன்கிழமை நடந்த ஏலத்தில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் பெரும்பாலான பிரிவுகளில் அதிகரித்தன.
பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவு சான்றிதழ்க் கட்டணம், இரு வாரங்களுக்கு முன்பிருந்ததைவிட சுமார் $3,000 அதிகரித்து $129,890ஆக இருந்தது.
எந்த வகை வாகனத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பொதுப் பிரிவின் சான்றிதழ்க் கட்டணம் புதிய உச்சமாக $131,000ஐத் தொட்டது. இதற்கு முந்திய கட்டணம் $126,201.
சிறிய கார்களுக்கான வாகனச் சான்றிதழ்க் கட்டணம் சற்று கூடி $100,000 ஆனது. வர்த்தக வாகனப் பிரிவின் சான்றிதழ்க் கட்டணமும் சிறு உயர்வடைந்து $82,801 ஆனது.
மோட்டார்சைக்கிள் பிரிவின் சான்றிதழ்க் கட்டணம் மட்டும் $99 குறைந்து $11,402 ஆக இருந்தது.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மூன்று மாத காலத்திற்கு, முந்திய மூன்று மாதக் காலத்தைவிட 5.6 விழுக்காடு அதிக வாகனச் சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த அதிகரிப்பு மிகவும் குறைவு என்றும் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் அமலாக்கப்படவேண்டும் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.