58 ‘எஸ்சோ’ நிலையங்களில் ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ஜின் ‘ஆன் தி கோ’ கடைகள்

58 ‘எஸ்சோ’ நிலையங்களில் ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ஜின் ‘ஆன் தி கோ’ கடைகள்

2 mins read
ae03589a-fb94-4f1f-8eca-d3812a17c57e
ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள ‘எஸ்சோ’ பெட்ரோல் நிலையத்தில் தனது முதல் கடையை திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 3) ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ திறந்தது. - படம்: சாவ்பாவ்

‘கோல்ட் ஸ்டோரேஜ்’ நிறுவனத்தின் ‘கோல்ட் ஸ்டோரேஜ் ஆன் தி கோ’ என்ற புதிய சில்லறை விற்பனைக் கடைகளைச் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள ‘எஸ்சோ’ பெட்ரோல் நிலையத்தில் தனது முதல் கடையை திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 3) திறந்தது.

ஃபேர்பிரைஸ் குழுமத்துக்குப் பதிலாக, சிங்கப்பூரிலுள்ள 58 ‘எஸ்சோ’ பெட்ரோல் நிலையங்களிலும் இந்தக் கடைகள் 2026ஆம் ஆண்டிற்குள் படிப்படியாகத் திறக்கப்படவுள்ளன.

இதற்காக ‘எஸ்சோ’ கட்டமைப்பை இயக்கி வரும் ‘ஆஸ்டர்’ நிறுவனத்துடன் ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ இணைந்து செயல்படுகிறது. இதில் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள், பொட்டலங்களில் உள்ள உணவுகள், பானங்கள், பலகாரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கட்டுப்படியான விலையில் விற்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கை ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி உத்தியின் ஒரு பகுதியாகும். பெட்ரோல் நிலையங்கள் மட்டுமின்றி, தீவுமுழுவதும் 100க்கும் மேற்பட்ட தனிக்கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ சிங்கப்பூரின் மேலாண் இயக்குநர் திரு லிம் பூன் சியோங் தெரிவித்தார்.

கடந்த 2025 மார்ச் மாதத்தில், மலேசியாவின் ‘மேக்ரோவேல்யூ’ நிறுவனம் ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ மற்றும் ‘ஜெயண்ட்’ பேரங்காடிகளைக் கையகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்படும் முதல் முக்கிய விரிவாக்க நடவடிக்கை இதுவாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப பெட்ரோல் நிலையங்களை வெறும் எரிபொருள் நிரப்பும் இடமாக மட்டுமின்றி, அன்றாடப் பொருள்களை வாங்கும் வசதியான சில்லறை வர்த்தக மையங்களாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எஸ்சோ’ கட்டமைப்பை இயக்கி வரும் ஆஸ்டர் நிறுவனம், ‘சந்திரா அஸ்‌ரீ’ குழுமத்தின் துணை நிறுவனமாகும். இது இந்தோனீசியாவைச் சேர்ந்த எரிசக்தி, ரசாயனம், உள்கட்டமைப்புக் குழுமமாகும்.

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து ‘எஸ்சோ’ பெட்ரோல் நிலையங்களையும் ‘எஸ்ஸோன்மொபில்’ நிறுவனத்திடமிருந்து இக்குழுமம் $1.28 பில்லியனுக்குக் கொள்முதல் செய்தது.

குறிப்புச் சொற்கள்