தோ பாயோ சேமிப்புக் கிடங்கில் சரிந்து விழுந்த தரை; மூவர் மீட்பு

தோ பாயோ சேமிப்புக் கிடங்கில் சரிந்து விழுந்த தரை; மூவர் மீட்பு

1 mins read
49a79869-7795-4aff-b0f5-d915f6d3a73d
சேமிப்புக் கிடங்குப் பகுதியின் தரை சரிந்து விழுந்ததில் மூவர் சிக்கிக்கொண்டனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்
multi-img1 of 2

தோ பாயோவில் சேமிப்புக் கிடங்குப் பகுதி ஒன்றின் தரை திடீரெனச் சரிந்து விழுந்ததில் தரைவிரிப்புக் கம்பளங்களுக்கும் அடுக்குச்சட்டங்களுக்கும் அடியில் மூவர் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, இரு சிறார்கள் உட்பட மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மாலை சுமார் 5.50 மணியளவில், 11 தோ பாயோ தொழிலியல் பேட்டையில் நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஜனவரி 28ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்குள், சிக்கிக்கொண்ட நால்வரில் ஒருவர் எப்படியோ தம்மை விடுவித்துக் கொண்டார். இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் மூவர் இன்னமும் சிக்கி இருப்பதாக மீட்புப் பணியாளர்களிடம் அந்த ஆடவர் தெரிவித்தார்.

பீஷான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவு மற்றும் பேரிடர் துணை, மீட்புக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் பணி மேற்கொண்டனர்.

குடிமைத் தற்காப்புப் படையின் தேடுதல் பணிக்கு இரண்டு நாய்களும் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்குப் பிறகு, தரைவிரிப்புகளை மீட்புப் பணியாளர்கள் அகற்றியதுடன் அடுக்குச்சட்டங்களை வெட்டி எடுத்து சிக்கி இருந்தோரைக் கண்டுபிடித்துவிட்டனர்.

தம்மை விடுவித்துக்கொண்ட ஆடவர் உட்பட நால்வரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இரண்டு சிறுவர்களும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் எஞ்சிய இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்