குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கைகொடுக்க $21 மில்லியன் நிதி திரட்டு

குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கைகொடுக்க $21 மில்லியன் நிதி திரட்டு

3 mins read
f833ddb7-faa9-4df7-809a-7b33cb4a0829
சிங்கப்பூர் சமூக அறநிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ஊடக நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். - படம்: சிங்கப்பூர் சமூக அறநிறுவனம்

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சிங்கப்பூர்ச் சமூக அறநிறுவனத்தின் ‘வலுவான சமுதாயத்திற்கான கூட்டுமுயற்சி’ (Collective for a Stronger Society) திட்டம் இதுவரை 21.4 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நன்கொடையைத் திரட்டியுள்ளது.

சிங்கப்பூர்ச் சமூக அறநிறுவனமும் சமூக உண்டியல் அமைப்பும் 2024ஆம் ஆண்டு இணைந்து தொடங்கிய இத்திட்டத்தின்கீழ் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30,000 பயனாளிகள் சுகாதாரம், வீடமைப்பு, கல்வி சார்ந்த பலன்களைப் பெற்றுள்ளனர்

இந்த மைல்கல்லைக் குறிக்கும் ஊடக நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஈசூன் குடும்ப சேவை நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாட்டி லோ, நலிவடைந்த குடும்பங்களுக்குத் தேவையான வலுவான ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் நிதி, சுகாதாரம் போன்ற பலதரப்பட்ட சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்கின்றன. அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவு தேவை. நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்தைத் தாண்டி, ‘நாம் முதலில்’ என்ற பரந்த நோக்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

“நன்கொடை வழங்குவது வெறும் பணப்பரிவர்த்தனையன்று. அது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் நீண்டகால அர்ப்பணிப்பு,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மையை சமூக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பால் டான் பாராட்டினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“சமூக முன்னேற்றம் மிகவும் முக்கியமானது. சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வாழ்க்கையில் செழிக்க வாய்ப்பு பெற வேண்டும். வசதியுடையோர் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நன்கொடையாளர்களின் தாராளமான ஆதரவால் இந்த இலக்குகள் சாத்தியமாகியுள்ளன. அவர்களில் சிலர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

நன்கொடையாளர்களில் சிலருக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார் சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்.
நன்கொடையாளர்களில் சிலருக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார் சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங். - படம்: சிங்கப்பூர் சமூக அறநிறுவனம்

நலிவடைந்த குடும்பங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ் புதிதாக நான்கு சுகாதார, கல்வித் திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து, ஆதரவு பெறும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது

அவற்றில் ஒன்றான சிங்கப்பூர் சிறுவர் சங்கத்தின் ‘காக்கிஹெல்த்’ (KakiHealth) திட்டம் ஈசூன் குடும்ப சேவை நிலையத்தில், குடும்பங்கள் நலமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வழிநடத்துகிறது.

இது, உடல் எடையைக் குறைத்தல், நலவுணவுப் பழக்கம், உடல், மனநல மேம்பாடு, தூக்க மேலாண்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட 12 மாத காலத் திட்டமாகும். இதில் பங்கேற்பாளர்களுக்குக் குழு உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான சமையல் முறை குறித்த செயல்விளக்கங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் மூலம் வழிகாட்டப்படுகிறது.

‘காக்கிஹெல்த்’ திட்டத்தில் பங்கேற்றுப் பயனடைந்தவர்களில் இல்லத்தரசியான 36 வயது போலீ அமிசந்த்தும் ஒருவர். இரண்டு குழந்தைகளின் தாயான அவர், திட்டத்தில் இணைந்தபோது 117 கிலோ உடல் எடையுடன் இருந்தார்.

‘காக்கிஹெல்த்’ திட்டத்தின்மூலம் பயன்பெற்ற இல்லத்தரசி போலீ அமிசந்த், 36.
‘காக்கிஹெல்த்’ திட்டத்தின்மூலம் பயன்பெற்ற இல்லத்தரசி போலீ அமிசந்த், 36. - படம்: சிங்கப்பூர் சமூக அறநிறுவனம்

உடல் எடை காரணமாகத் தமது சிறு குழந்தைகளுடன் சுறுசுறுப்பாக விளையாடவோ, அவர்களை முதுகில் தூக்கிச் சுமக்கவோ, தரையில் அமர்ந்து நேரத்தைச் செலவிடவோ முடியாத நிலை இருந்ததாக அவர் கூறினார்.

ஓராண்டுக்கும் மேலான தொடர் முயற்சியில் சத்தான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து 31 கிலோவுக்கு மேல் எடையைக் குறைத்து தற்போது 86 கிலோவுடன் உள்ளார்.

‘காக்கிஹெல்த்’ திட்டத்தில் பங்கேற்றுப் பலனடைந்தார் இல்லத்தரசியான போலீ அமிசந்த், 36 (வலது).
‘காக்கிஹெல்த்’ திட்டத்தில் பங்கேற்றுப் பலனடைந்தார் இல்லத்தரசியான போலீ அமிசந்த், 36 (வலது). - படம்: சிங்கப்பூர் சமூக அறநிறுவனம்

திட்டத்தின்மூலம் பெற்ற $200 ‘என்டியுசி’ பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, விலை அதிகமான ஆலிவ் எண்ணெய், குறைந்த சர்க்கரைச் சத்து கொண்ட அரிசி போன்ற ஆரோக்கியமான மளிகைப் பொருள்களை வாங்கி, தமது குடும்பத்தின் உணவுப் பழக்கத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“உடல் எடையைக் குறைக்க முயலும்போது, நாம் தனியாகச் செயல்பட வேண்டியதில்லை என்பதை உணர்வது அவசியம். சமூகத்தின் ஆதரவை நாடுங்கள். ஆரோக்கியம் உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதால் தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள்,” என்றார் திருவாட்டி போலீ.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சமூக சேவைநன்கொடைஆதரவுஆதரவுத் திட்டம்உடற்பயிற்சிகுடும்பம்