தற்காப்புத் துறைக்குத் தேவைப்படும் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமான ‘காலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ தனது உற்பத்திப் பிரிவை பிடோக்கில் இருந்து சிலேத்தார் விண்வெளித் துறைத் தொழிற்பூங்காவுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகப் புதன்கிழமையன்று (ஜூலை 24) அந்த நிறுவனம் தெரிவித்தது.
$336 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை அதன் விண்வெளி உற்பத்தித் திறன்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்திப் பிரிவுக்கான கட்டுமானம் 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தொடங்கி 2027ஆம் ஆண்டு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் புதிய தளத்தில் உற்பத்தி 2028ஆம் ஆண்டுத் தொடங்கும் என முன்னுரைக்கப்பட்டது.
இந்தப் பிரிவு விண்வெளித் துறையில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றை ஆதரிக்கும் எனக் கூறப்பட்டது.
“முன்னணி விண்வெளி நிறுவனங்களுடன் எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குடன் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கொண்டிருக்கும் பங்காளித்துவத்திற்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” எனச் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் சிண்டி கோ தெரிவித்தார்.
அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையானது ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான தலைமையகமாகும். இங்கு 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, உற்பத்தி, விற்பனை சந்தைப்படுத்தல் ஆகிய பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்.
காலின்ஸ், தனது தயாரிப்புகளை போயிங், ஏர்பஸ் போன்ற விமான நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.

