போக்குவரத்துச் சேவை நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோவின் நிர்வாகப் பிரிவுத் தலைமையகம் லேப்ரடோர் டவர் (Labrador Tower) கட்டடத்துக்கு இடமாறவுள்ளது.
அலுவகக் கட்டடமான லேப்ரடோர் டவர், பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் அமைந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் கம்ஃபர்ட்டெல்குரோவின் நிர்வாகப் பிரிவுத் தலைமையகம் லேப்ரடோர் டவருக்கு இடம் மாறும்.
அது பல ஆண்டுகளாக பிராடல் ரோட்டில் செயல்பட்டுவந்துள்ளது. அங்குச் செயல்படுவதற்கான குத்தகைக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதைத் தொடர்ந்து தலைமையகம் இடமாறவிருக்கிறது.
கம்ஃபர்ட்டெல்குரோ பேச்சாளர் ஒருவர் அறிக்கை மூலம் இடமாற்றம் குறித்து வெள்ளிக்கிழமை (ஜூன் 20) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தினார். 34 தளங்கள் உள்ள லேப்ரடோர் டவரில் சுகாதார அமைச்சு, புருடென்ஷியல் காப்புறுதி நிறுவனம் ஆகியவையும் இயங்கும்.
லேப்ரடோர் டவரை, பொதுப் பயனீட்டு அமைப்பான எஸ்பி குழுமம் கட்டியது. அதற்கான கட்டுமானப் பணிகள் சென்ற ஆண்டு மத்தியில் நிறைவடைந்தன.
எத்தனை ஊழியர்கள் இடமாறுவர் அல்லது எந்தப் பிரிவுகள் இடமாறும் என்ற விவரங்களை கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவிக்கவில்லை. எனினும், அந்நிறுவனத்தின் நிதி, தொழில்நுட்பம், மனிதவளம், சட்டம், வர்த்தக மேம்பாடு, விளம்பரம், வர்த்தகத் தொடர்பு ஆகிய பிரிவுகள் இடமாறும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

