கம்ஃபர்ட்டெல்குரோவைச் சேர்ந்த டாக்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஒரு கதவைத் திறந்தபடி பயணம் மேற்கொண்டது.
இந்தச் சம்பவம் பார்ட்லி ரோட் ஈஸ்டில் மாலை 6 மணிவாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அதுகுறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாக கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். தற்போது அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். டாக்சி பயணிகளின் பாதுகாப்புதான் எங்களது முன்னுரிமை,” என்று நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) கூறினார்.
ஃபேஸ்புக்கில் உள்ள எஸ்ஜிஆர்வி (SGRV) என்னும் பக்கத்தில் சம்பவம் குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது.
காணொளியில் மஞ்சள் நிற டாக்சி ஒன்று சாலையில் வலது பக்கத்தில் உள்ள தடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தது. டாக்சியில் ஓட்டுநர் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் உள்ள கதவு திறந்திருந்தது.
ஓட்டுநர் சிறிது நேரம் கதவை திறந்தவாறே டாக்சியை ஓட்டினார். பின்னர் கதவை அடைத்தார். அந்தச் சம்பவம் நடந்தபோது டாக்சியில் அந்த ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த டாக்சியில் பயணிகள் யாரேனும் இருந்தனரா என்பது குறித்து கம்ஃபர்ட்டெல்குரோ விளக்கமளிக்கவில்லை.

